அசத்தல் அஞ்சலி ! சூப்பர் சூரி !!
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த “ரோட்டர்டாம்” சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்க்ரீன்’ போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களில் பார்வைக்காக இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களை வென்றதை அரங்கம் அதிரும் கைதட்டல்களின் வழி உணர முடிந்தது. மேலும் கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இத்திரைப்படம் ஒரு தலை சிறந்த படைப்பு எனவும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளதாகவும் பலரும் பாராட்டினர்.
இயக்குநர் ராம் , நடிகர்கள் என ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.