அண்ணாமலைக்கு துரை வைகோ சவால் !!
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் வேலூர் மண்டல நிதியளிப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடையே பேசியபோது, திமுக கூட்டணியில் சென்ற முறை ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி பெற்ற நிலையில், இந்த முறை இரண்டு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்டுள்ளதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக எழுச்சி அடைந்து வருகிறது, வளர்ந்து விட்டது என தவறான தகவல்களை கொடுத்து வருவதாகவும், அப்படி இருந்தால் அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வரட்டும் என்றும் சவால் விடுத்தார்.
2014 பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்படும் என்று தெரிவித்த பாஜக அரசு இதுவரை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவில்லையென மேலும் குற்றம் சாட்டிய துரை வைகோ, கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.

நடிகர் விஜய் தனது கட்சியை தற்போது தான் ஆரம்பித்துள்ளார். அவரது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை அறிவித்து செயல்பட்ட பிறகு தான் அவரைப் பற்றி விமர்சிக்க முடியும் தற்போது நடிகர் விஜய் குறித்து விமர்சிப்பது சரியாக இருக்காது என்றும் மேலும் தெரிவித்த துரை.வைகோ, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது நியாயம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதிமுக மாநில பொருளாளர் மு.செந்திலதிபன் துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, மாநில மாணவரணி துணை செயலாளர் பாசறை பாபு மற்றும் மாவட்ட செயலாளர்கள், உட்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிருபர்கள் அண்ணாமலையை விடுங்க, இவரு கூட உட்கார்ந்து இருக்கறதுல எத்தனை பேரு தேர்தல்ல வெற்றி பெற்றவங்க இவரு எத்தனி முறை தேர்தல்ல நின்னிருக்காரு சரி சரி இவரு முதல்ல ஜெயிச்சுட்டு அப்புறம் சவால் விடட்டும் என கலைந்து சென்றனர்.