அண்ணிக்கு தண்ணீ காண்பிக்கும் தேசிய மாநில கட்சிகள் !
’அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தபோதே, – அதிமுக கூட்டணியைத்தான் தேமுதிக தேர்ந்தெடுக்கும் என்பதை பிரேமலதா உறுதி செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில், நிருபர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா, பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து ஒவ்வொரு கட்சியும் நன்கு யோசிக்க வேண்டும்’ என்று சொல்லி, பாஜக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பதை நிர்வாகிகளுக்கு உணர்த்திவிட்டார்.
அவர் அதிமுக நிலைப்பாட்டைத்தான் எடுப்பார் என்றும் கட்சி நிர்வாகிகளும் புரிந்து கொண்டனர். பிரேமலதாவின் இந்த எண்ணம்தான் கடந்த மாதம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பிரதிபலித்தது. அதிமுகவுடன் கூட்டணிதான் என்று முடிவெடுத்த பிறகு, எதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இழுக்க வேண்டும் ? ராஜ்யசபா எம்பி சீட் வேண்டும் என்று அடம்பிடிக்க வேண்டும்? இது தேமுதிகவின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு, ராஜ்யசபா எம்பி சீட் குறித்து பேசாமல், பின்வாசல் வழியாக தனது குடும்பத்தில் ஒருவரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையையே இது காட்டுகிறது.
மக்களை சந்திக்காமல் எம்பி ஆவதற்கு எதற்கு அரசியல் கட்சி. எனவே, இனியும் இழுத்தடிக்காமல் அதிமுகவோ, பாஜவோ ஏதேனும் ஒரு கட்சியுடன் உடன்பாடு செய்ய வேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது கேப்டன் இருந்த பொழுது நமக்கு இருந்த செல்வாக்கு இப்பொழுது இருக்கிறதா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கொட்டித் தீர்க்கின்றனர் தேமுதிகவினர்.
ஒரு வேளை அண்ணியின் இலக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலாக இருக்குமோ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் பார்த்து நல்ல முடிவை இன்னைக்கே எடுத்துடுங்க நாளைக்கு பங்குனி பொறக்குது !.