அதிகாலையில் உதித்த அக்னி குண்டம் பாமகவினர் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது !
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை புதிதாக செய்து அதிகாலையில் பாமகவினர் வைத்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அக்னி குண்டத்தை வைத்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் பக்தவச்சலம் உட்பட 20க்கும் மேற்பட்ட பாமகவினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை வேலூர் செல்லும் சாலையில் உள்ளது நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னிகுண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை 21-12-1989ம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவன தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்காகவும் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பதற்காகவும் பொதுமக்களின் நலன் கருதி அந்த அக்னி குண்டத்தை வேறு இடத்துக்கு மாற்றி கொள்ளும் பொருட்டு தற்காலிகமாக அகற்றிக் கொள்ளப்பட்டது. அதன்படி அதிகாரிகள் ஒதுக்கித் தந்த பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள இடத்தில் அந்த அக்னி குண்டம் நிறுவப்பட்டது.
இந்நிலையில் அந்த அக்னி குண்டத்தை அகற்ற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்ததன் பேரில் அக்னி குண்டத்தை அகற்றும்படி அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசாரின் துணையுடன் அக்னி குண்டத்தை அகற்றுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதைக் கேள்விப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் நாயுடுமங்கலம் கூட்ரோடு அருகே திரண்டு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த அக்னி குண்டத்தை வருவாய் துறையினர் அகற்றி கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்தனர்.
பலமுறை அந்த அக்னி குண்டத்தை அந்த பகுதியில் நிறுவ பலமுறை அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகம் மறுத்த நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிகாலையில் நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் திரண்ட பாமகவினர் புதிதாக செய்யப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அங்கு அமைத்து அதற்கு மாலையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் புதிதாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை அங்கிருந்து அகற்றி அக்னி குண்டத்தை வைத்த 20க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறை கைது செய்து போளூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.