அள்ளிக்கொட்டும் அதானி ரூபாய் 60 ஆயிரம் கோடி முதலீடு !
இந்தியாவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பராமரிப்புப்பணியில் அதானி குழுமத்தினர் களம் இறங்கியுள்ளனர். நாட்டின் சில குறிப்பிட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள், இப்போதைக்கு அதானி குழுமத்தின் பராமரிப்பில் உள்ளன. n இந்நிலையில், நாட்டில் இப்போது தங்கள் பராமரிப்பில் உள்ள மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் உட்பட விமான நிலையங்களின் திறனை மேம்படுத்த உள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் எம்டி கரண் அதானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதானி ஏர்போர்ட்ஸ்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அருண் பன்சால் கூறியதாவது… நாட்டில் எங்கள் பராமரிப்பில் உள்ள 7 விமான நிலையங்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இதில், விமான நிலையங்களின் போர்டிங் கேட், ஓடுபாதைகள் உட்பட பிற வசதிகளுக்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். மீதமுள்ள 30 ஆயிரம் கோடி ரூபாயானது, மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின் மேம்பாட்டு மற்றும் வளர்ச்சிப் புணிக்காக ஒதுக்கப்படும்.
இப்பொழுதைய திட்டப்படி, எங்கள் விமான நிலையங்கள் ஆண்டுக்கு 10 கோடி முதல் 11 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டவையாக திகழ்கிறது. வளர்ச்சி, மேம்பாட்டு பணிகளால் இந்தத் திறன் 3 மடங்காக அதிகரிக்கும். லக்னோவுக்கு புதிய முனையம் கிடைத்துள்ளது. நவி மும்பை அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பயன்பாட்டுக்கு வரும். கவுகாத்தி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கப்படும்.
அகமதாபாத், ஜெய்ப்பூருக்கு புதிய டெர்மினல்களை திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணிகள் முடிவடைந்தால் 2040ல் எங்கள் விமான நிலையங்கள் வழியாக பயணிப்போர் எண்ணிக்கை 25 முதல் 30 கோடியாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.