அவ்விட தேசத்தில் வேட்டியில் மோடி !
எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் ஆடைகளை அணிந்து கொண்டு கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த முறை கேரளா வந்தபோது அந்த முறையை மாற்றினார். நேற்று முன்தினம் கொச்சியில் நடந்த அவரது ‘ரோடு ஷோ’ வில் காவி நிறத்திலான குல்லா, பைஜாமா மற்றும் மோடி கோட் ஆகிய வட இந்திய கெட்அப்பில் தான் அவர் கலந்து கொண்டார். கடந்த முறை இங்கு வந்த போது அவர் வேஷ்டி ஜிப்பாவில் ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோ வாகனத்தில் பிரதமருடன் பா.ஜ.க.மாநிலத் தலைவர் வி.முரளிதரனுடன் நடிகர் சுரேஷ் கோபிக்கும் இடம் அளிக்கப்பட்டது.எதிர்வரும் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபிக்கு தான் சீட் என்பது இதனால் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. கடந்த முறை நடந்த தேர்தலிலும் சுரேஷ் கோபி போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.என்.பிரதாபனிடம் அவர் தோல்வியை தழுவினார். சமீபத்தில் திருச்சூரில் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டு, ‘இதுதான் மோடி கேரண்டி’ என்று மலையாளத்தில் குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தார்.இந்த ரோடு ஷோவிலும் நினைவுபடுத்திய மோடி, பெண்களின் ஓட்டு வங்கியைத் தான் பிரதானமாக குறி வைத்துப் பேசினார். தொடர்ந்து கொச்சி மரைன் டிரைவில் நடந்த மாநாட்டில், சாதகமற்ற சூழ்நிலைகளில் கூட கேரளாவின் பட்டி தொட்டியெல்லாம் நம் தொண்டர்கள் பா.ஜ.க.வின் கொடிகளை உயர்த்திப்பிடிக்கிறார்கள். நாட்டில் நீதிக்கு சிலர் குந்தகம் விளைவிக்கிற போதும் நாட்டுப் பற்றுக்காக போராடும் பா.ஜ.க. தொண்டர்களை வணங்குகிறேன். கேரள மக்களின் பாசத்தை கண்டு பல முறை வியந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானோர் என்னை ஆசீர்வதிக்க வந்திருக்கின்றனர். இங்குள்ள தொண்டர்களின் திறமை அபாரமானது.டெல்லியில் ஆட்சி வேண்டுமெனில் கேரளாவில் இருந்து கிடைக்கும் வெற்றியும் மிக முக்கியம் என்றார். கொச்சியில் இருந்து நேற்று காலையில் ஹெலிகாப்டரில் குருவாயூருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தேவஸ்வம் போர்டிற்கு சொந்தமான ஸ்ரீவல்சம் விடுதியில் தங்கினார். தொடர்ந்து கிருஷணன் கோவிலில் அவர் தரிசனம் செய்தார். கோவில் விதிமுறைப்படி வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் போர்த்தியபடி கண்ணனை தரிசனம் செய்த அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் கூட வேட்டி அணிந்தே உடன் வந்தனர். தொடர்ந்து தாமரை மொட்டுகளால் அவருக்கு துலாபாரம் நடத்தப்பட்டது. தேவஸ்வம் அதிகாரிகள் குருவாயூரப்பனின் சிலை ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கோயில் வளாகத்தில் இருந்த பிரதமர், கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணத்தை நடத்தி வைத்தார்.நரேந்திர மோடி, திருமணத்தில் பங்கேற்க வந்த நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட சிலருக்கு அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு அட்சதையை வழங்கினார். மேலும் அன்று காலை சன்னதியில் மணம் முடித்த தம்பதியினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிறகு அங்கிருந்து கிளம்பினார் மோடி.கண்ணனை கும்பிட்ட கையோடு ராமனை தரிசிக்க திருப்ரயார் கோவிலுக்கு சென்றார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அங்கு இருந்து விட்டு கொச்சிக்கு கிளம்பிச் சென்றார் மோடி கொச்சியில் கப்பல் பராமரிப்பு மையம், எல்.பி.ஜி டெர்மினல் உள்ளிட்ட நாலாயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மாலையில் டெல்லிக்கு கிளம்பினார்.