ஆன்மீக சுற்றுலா இரண்டாம் கட்டமாக 200 பேர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இருந்து 200 பக்தர்கள் அறுபடை வீடு தரிசனத்திற்கு இந்து சமய அறநிலைத்துறையால் அழைத்துச் செல்லப்பட்டனர். முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு தலங்களுக்கும் மூத்த குடிமக்கள் சென்று தரிசனம் செய்திட கஷ்டப்படுவதை கருத்தில் கொண்டு இலவசமாக அழைத்துச்செல்லும் புதிய முயற்சியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்காகவே இந்த ஆன்மிக சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. ஆறு திருக்கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பேர் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்க உள்ளனர்.
ஜனவரி மாதம் முதற்கட்டமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது இரண்டாம் கட்டமாக பழனியில் இருந்து 200 பேர் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பூர் ,கோவை, ஈரோடு, தேனி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பழனிக்கு வந்த பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்தனர்.
பின்னர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திருத்தணி பழமுதிர்ச்சோலை உள்ள இடங்களில் தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இந்து சமய அறநிலைத்துறை அறுபடை வீட்டை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.