இரு திவ்விய தேசங்கள் ஒரே உற்சவமூர்த்தி !
உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலமாக திகழ்கிறது. இவ்வாலயம் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில், கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது. திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம். சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து 3கி.மீ. நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் அழகியமணவாளனாக நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு இக்கோயிலில் உற்சவ விக்கிரகம் இல்லை. மாறாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் உற்சவர் நம்பெருமாளே இக்கோயிலுக்கும் உற்சவராக இருக்கிறார். நம்பெருமாளின் முற்காலப்பெயர் அழகியமணவாளன் என்பதும், பிற்காலத்தில்தான் அவருக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் உறையூரிலுள்ள அழகியமணவாளனைப்போலவே தோற்ற ஒற்றுமை கொண்டவர். இக்காரணங்களினால் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரே வருடத்திற்கு ஒரு முறை பங்குனி ஆயில்யத்தன்று ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு காவிரியைக் கடந்து உறையூர் வந்து கமலவல்லிநாச்சியாருடன் ஒருநாள் முழுவதும் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தபின் நள்ளிரவுக்குமேல் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். இவ்வகையில் இரண்டு திவ்விய தேசங்களுக்கும் சேர்த்து ஒரே உற்சவமூர்த்தி இருப்பது இங்கு மட்டுமே. தலச்சிறப்பு : பொதுவாக பெருமாள் ஸ்தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர்கள். ஆனால், இங்கு மஞ்சள்காப்பு பிரசாதம் தருகின்றனர். அம்பாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப்பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டதால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கி இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. திருமாலின் பக்தரான நந்த சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. திருமாலிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி திருமால் அனுப்பினார். ஒரு சமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, கமலவல்லி என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, திருமால் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக் கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தாள். இதை புரிந்துகொண்ட திருமால், நந்தசோழனின் கனவில் தோன்றி, தான் கமலவல்லியை மணக்க விரும்புவதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான். உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் பெயரளவில் நாச்சியார் கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கமலவல்லி நாச்சியார் தாயாராக இருந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நடைமுறைகள் தான் இங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் இங்கும் நம்பெருமாள் தான் உற்சவர். வருடம் ஒரு முறை பங்குனி தேர் திருவிழாவின்போது நம்பெருமாள் கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருக்க இங்கு வருவதே சேர்த்தி சேவையாகும். சேர்த்தி சேவைக்காக ஆறு, காடு, வயல் வாய்க்கால் வரப்புகளை எல்லாம் தாண்டி நம்பெருமாளை ஸ்ரீபாதம் தாங்கிகள் எனப்படும் கோவில் பட்டர்கள் மற்றும் பணியாளர்கள் நம்பெருமாளை பல்லக்கில் வைத்து தூக்கி கொண்டு வருகிறார்கள். பின்னர் சேர்த்தி சேவை முடிந்ததும் அதே வழியாக மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று கண்ணாடி அறையை அடைகிறார் நம்பெருமாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரெங்க மன்னாரின் மகள் ஆண்டாளாக அவதரித்து பெருமாளையே மணந்து கொண்ட மகாலட்சுமியை போன்று தான் கமலவல்லியும் இம்மண்ணுலகில் ஒரு மன்னனின் மகளாக அவதரித்து ரெங்கநாதர் மீது காதல் கொண்டு அவரை அடைந்து உள்ளார். இதன் அடிப்படையில் நாச்சியார் கோவில் உருவானது எப்படி? என்பதற்கு ஒரு தனி வரலாறே உள்ளது. கமலையின் தரிசனமே கவலையில் நிரசனமாம் ! மனவாளன் மனமகிழ்வே மானிடரின் பெருவாழ்வாம்