ஐஜி சத்யபிரியா : உண்மை ஒரு நாள் வெல்லும் ! அன்று உலகம் உன் பேர் சொல்லும்…
தமிழக காவல்துறையில் 1997ம் ஆண்டு நேரடி டிஎஸ்பியாக தேர்வாகி 2012ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர் சத்யபிரியா. இவர் திருச்சி, சேலம் மாநகரங்களில் துணை ஆனையர் , நாமக்கல் எஸ்பியாக பணியாற்றினார்.2012ம் ஆண்டு ஐ.நா அமைதிப்படையில் சேர விண்ணப்பித்து தேர்ச்சி பெற்று சூடானுக்கு செல்ல ஐ.நா சபையால் ஆணை பிறப்பிக்கபட்டது. இதனையடுத்து உள்துறை அமைச்சரகம் புதுடெல்லியில் சத்யபிரியா ஜனவரி 2012ல் அறிக்கை செய்த பின்னர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தன் முன் அனுமதி ஆணையினை தக்க காரணமின்றி பின் வாங்கிய பொழுது, மத்திய அரசு அதனை ஏற்று கொள்ளாமல் அயல் பணிக்கு செல்ல ஆணை பிறப்பித்தது. அதன்படி 2012ம் ஆண்டு பிப்ரவரி 5ம்தேதி சத்யபிரியா அயல்பணியாக (UN Mission) சூடானுக்கு சென்றார். அங்கு பணி முடித்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் திரும்பினார்.அரசு ஒப்புதல் பெறாமல் வெளிநாடு சென்றதாக கூறி சத்யபிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 15 மாதங்களுக்கு பிறகு சட்டப்போராட்டத்தில் வென்று உச்சநீதி மன்ற உத்தரவின்படி தூத்துக்குடி போலீஸ் பயிற்சி எஸ்பியாக பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு 2019ல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2021ல் மெச்சத்தக்க குடியரசு தலைவர் விருதும் பெற்றார். கடந்த ஆண்டு 2023ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ளார்.இவர் சென்னை பயிற்சி கல்லூரியில் பணிபுரிந்த போது அங்கு தவறுகள் செய்த சில அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததின் விளைவாக சில மொட்டை கடிதங்களின் அடிப்படையில் (Anonymous petition) சில குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அதில் அரசு வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு உபயோகித்ததாகவும், மேலும் வாகனம் சம்மந்தப்பட்ட சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக திரு.கரன்சின்ஹா IPS டிஜிபி, பயிற்சி (RTD) அவர்கள் விசாரணை செய்து அதில் உண்மை தன்மை இல்லை என உறுதி செய்து 2021 மார்ச் மாதம் இக்கோப்பு முடிக்கப்பட்டது.எனினும், இது சம்மந்தமான கோப்புகளை ஜூன் 2022ல் மேற்குறிப்பிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரிகளால் உயிர்பெற்று வேறு ஒரு உயர் அதிகாரியின்(ஏடிஜிபி) மூலம் ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டு உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டது. பிறகு டிசம்பர் 2022ல் இந்த கோப்பு தொடர்பான ஆவணங்கள், பயிற்சி பிரிவு டிஜிபி-ன் அறிக்கை, சம்மந்தபட்ட டிஐஜி-ன் விளக்கவுரை மற்றும் எல்லா தரப்பு விவரங்களையும் மறுபரிசலனை செய்து டிஜிபி, தலைமையகம் இதில் எவ்வித முகாந்திரமும் இல்லை என உறுதி செய்து இக்கோப்பினை முடித்து வைத்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டது.மேலும், இவர் 2023ல் திருச்சிக்கு காவல் ஆணையர்/ஐஜி யாக பதவி உயர்வு பெற்றும், தற்போது பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி யாக பணியாற்றி வருகிறார்.தற்போது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் படியும், அவர் அளித்த விளக்க அறிக்கை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட மெமோ விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என டிஜிபிக்கு உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இப்பிரச்சினையை மீண்டும் 1 வருடம் கழித்து, இந்த கோப்பினை ஏற்கனவே இருமுறை முடிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தும் இந்த நடவடிக்கையின் பின்னணி என்ன ? 2020ம் ஆண்டில் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறப்படும் இதனை இப்பொழுது பெரிதாக்க தகுந்த காரணம் எதுவும் இல்லாத போதும், உண்மையாக இருப்பவர்களுக்கும், தன் கடமையை செவ்வென நேர்மையாக செய்பவர்களுக்கும் பணிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திலும் சமுதாயத்தில் இழிவு படுத்திட வேண்டியும் வீண் பழிகள் அடுக்கப்படுகின்றன. இத்தகைய கட்டமைப்புகள் எந்த ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதற்கு சாட்சியாகவும் உண்மையாகவும் உள்ளது.