ஒரே இடத்தில் மூன்று ஹெலிபேட்…
ஜனவரி 22ம்தேதி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ரமேஸ்வரம் ஆகிய புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன்படி, நாளை 20ம் தேதி காலை 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் கோவிலுக்கும், அங்கிருந்து, ராமேஸ்வரத்துக்கும் ஹெலிகாப்டரில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, திருச்சியில், யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடலை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின், பிரதமர் வருகைக்கான ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது.ஹெலிபேட் அமைக்கும் பகுதியை, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
முதல்கட்டமாக, கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடலை, மாநகராட்சி பணியாளர்கள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, சமன் செய்தனர். அடுத்து, தளம் அமைத்து, ஜல்லி பரப்பி தார் போட்டு, 3 ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிபேட் அமைக்கும் பகுதியில், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருந்து காரில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதால், பஞ்சக்கரையில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையிலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படுகிறது. அந்தப் பணிகளை, மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன் பார்வையிட்டார்.
பிரதமர் வருகையின் போது, 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேரடியாக சாலை மார்க்கமாக, திருவானைக் காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது, என்று திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, திருச்சியில் ட்ரோன் பறக்க தடைவிதித்து, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவில் வளாகம் மட்டுமின்றி, கோவிலை சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இது தவிர, இன்று மாலை 6 மணி முதல் நாளை பிற்பகல் 2.30 மணி வரை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொது தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சக்கரை ஹெலிபேடில் இருந்து, பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதற்கான குண்டு துளைக்காத காரும், அவருடன் செல்லும் முக்கிய பிரமுகர்களுக்கான காரும், ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலுக்கு காரில் வருவதால், கோவிலில் இருந்து ஹெலிபேட் வரையிலான சாலை புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது.