கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார் !

0

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி மலேசியாவில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கினர்.

தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.

logo right

நீர் குறித்து இஸ்லாமிய கல்விக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஃபாலும், காற்று குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரனும், தீ குறித்து சுலுத்தான் இதுரீசு கல்வியல் பல்கலைக்கழக தலைவர், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தை சேர்ந்த முனைவர் மனோன்மண தேவி அண்ணாமலையும், பூமி பற்றி மேனாள் காவல்துறை ஆணையர் புலவனின் புவி காக்கும் வேட்கை மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ தெய்வீகன் ஆறுமுகமும், ஆகாயம் குறித்து மலேசியத் தமிழ்நெறிக் கழகம் தேசியத் தலைவர் தமிழ்ப்பெருந்தகை இரா திருமாவளவனும் விரிவாக பேசி கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பை வெகுவாக பாராட்டினர்.

இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.