கவிதையே தெரியுமா உன் கனவு நானடி…
எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இணைந்து சின்னஞ்சிறு பாடல்கள் என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள்.
கபிலன்வைரமுத்து எழுதிய கடவுளோடு பேச்சுவார்த்தை, மனிதனுக்கு அடுத்தவன், மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை போன்ற பல்வேறு கவிதை நூல்களில் இருந்து ஐந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறிய பாடல்களாக வடிவமைத்திருக்கிறார்கள்.
‘அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவது மாதிரி சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்’ என்று இசை ஆல்பத்தின் அறிமுகக் காணொளியில் கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார்.
தில்லை, பாலை, சிந்துவாரம், புன்னை, மகிழம் என சங்கப் புலவர் கபிலர் பாடிய 99 வகையான பூக்களில் ஐந்து பூக்களின் பெயர்களை ஐந்து பாடல்களுக்கு சூட்டியிருக்கிறார்கள். பாடல்களை பிப்ரவரி முதல் வாரம் தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட இசைக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரம்யா ராம்குமார், ராம்நாத் பகவத், அதிதி பவராஜு,ஷோபிகா முருகேசன், புவனா ஆனந்த் ஆகியோர் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். சின்னஞ்சிறு பாடல்களுக்கான ஓவியங்களை மாவீரன் மற்றும் அயலான் படங்களில் ஓவியராக பணியாற்றிய ராமமூர்த்தி வரைந்திருக்கிறார். வரிக் காணொளிகளை புரொஃபைல் மேக்கர் குழு செய்திருக்கிறார்கள்.
கபிலன்வைரமுத்து பாலமுரளி பாலு கூட்டணியில் ஏற்கனவே பணமதிப்பிழப்புக்கு எதிராக நடிகர் சிலம்பரசன் பாடிய டீமானிடேஷன் ஆந்தம் பாடலும், மது கலாச்சாரத்திற்கு எதிராக நடிகர் டி.ராஜேந்தர் பாடிய ஏந்திரு அஞ்சலி ஏந்திரு தனிப்பாடலும் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கபிலன்வைரமுத்து தற்போது இந்தியன் 2, இந்தியன் 3, கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.