காங்கிரஸை அலறவிடும் அகிலேஷ் யாதவ்…
உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான ‘ஐஎன்டிஐஏ’வில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாடி, காங்கிரஸ், ராஷ்டிரீய லோக்தளம் இடையே சமீபத்தில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடிக்கு 62, காங்கிரசுக்கு 11,ஆர்எல்டிக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், 16 வேட்பாளர்கள் கொண்ட சமாஜ்வாடி முதல் பட்டியலை அதன் தலைவர் அகிலேஷ் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, அவருடைய மனைவி டிம்பிள் மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். 2019 தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாடி நிறுவன தலைவர் முலாயம் சிங் வெற்றி பெற்றார். அவர் 2022ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மரணமடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் டிம்பிள் 2,88,461 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யாவை தோற்கடித்தார். டிம்பிள், கன்னோஜ் தொகுதியில் 2 முறை எம்பியாக வெற்றி பெற்றவர்.
சம்பல் தொகுதி வேட்பா ளராக இப்போதைய எம்பி ஷபிகுர் ரகுமான் பர்க் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்ற 93வயதுடைய இவர் தான் மிகவும் வயதான எம்பியாக உள்ளார்.
லக்னோ தொகுதிக்கு உபி. முன்னாள் அமைச்சரும், எம் எல்ஏவுமான ரவிதாஸ் மெஹ் ரோத்ரா, பிரோஷாபாத் தொகுதிக்கு மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் மகன் அக்ஷய், படான் தொகுதிக்கு தர்மேந்திர யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
யார்யாருக்கு எந்த தொகுதி என பேசி முடிக்காத நிலையில் அதிரடியாக அகிலேஷ் யாதவ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார், ஏற்கனவே மம்தா பகவான்சிங் ஆகியோர் தனித்து களம் காணப்போகிறோம் என அறிவித்து விட்டனர், நிதிஸ்குமார் என் வழி தனி வழி என டாட்டா காண்பித்து விட்டார் இதனால் காங்கிரஸ் வட்டாரம் கலக்கத்தில் உள்ளது.