காட்டு நாயக்கர்கள் முற்றுகையிட்டு போராட்டம் !!
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரங்கூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்களது ஜாதி சான்றிதழில் உள்ள ராஜகம்பளம் என்பதை மாற்றி இந்து காட்டு நாயக்கன் என கொடுக்க வேண்டி கடந்த 13 ஆண்டுகளாக தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்ததாகவும், இதன் பேரில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னை மற்றும் உதகை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தங்களது கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றதாகவும், இதனையடுத்து எந்தவித நடவடிக்கையும் தங்களுக்கு எடுக்கப்படவில்லை எனவும், முசிறி கோட்டாட்சியர் மற்றும் தொட்டியம் வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் காட்டு நாயக்கர் குடும்பத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக கூறி வேட்டையாடும் உபகரணங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோட்டாட்சியர் ராஜன் தொட்டியம் வட்டாட்சியர் கண்ணாமணி காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உதகை மற்றும் சென்னை அதிகாரிகள் தங்களது கிராமத்தில் ஆய்வு செய்த அறிக்கை தங்களுக்கு வரவில்லை என அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், மேலும் ஒரு மாத காலத்திற்குள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என கோட்டாட்சியர் ராஜன் அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.