கிட்டுமா எட்டு ? அடங்க மறு அத்து மீறு…
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மேலிடப் பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தை குழுவை, ‘சென்னை அறிவாலயத்தில் நேற்று முன் தினம் சந்தித்து முதல் கட்ட பேச்சு நடத்தினர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை 9ம் தேதி நடக்கிறது.
இந்தக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று சென்னை அறிவாலயம் சென்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த் தையில் பங்கேற்கின்றனர்.
2019 நாடாளுமன்ற தேர்தலில், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் விடுதலைச் சிறுத் தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை எட்டு தொகுதிகளை கேட்கப்போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 3ம் தேதி திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த தேர்தலில் திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டு வென்றுள்ளது.
4ம் தேதி,திமுக- மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடக்கிறது. 5 அல்லது 6ம் தேதி திமுகவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் திருச்சியில் மதிமுக போட்டியிடப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன.