கும்பகோணம் : அரசுக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை !
இக்கூட்டத்திற்கு தலைவர் சோழா.சி.மகேந்திரன் தலைமை வகித்தார், துணைத் தலைவர்கள் வேதா.ராமலிங்கம், பா.ரமேஷ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வி.சத்தியநாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர்கள் த.மாணிக்கவாசகம் மு.கியாசுதீன் 2023 ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்பித்தனர். இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1) நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளது.ஆகையால் தொழில் வணிகம் செய்பவர்கள் எந்த அளவிற்கு பணம் கையில் கொண்டு செல்லலாம், அதற்கு உரிய ஆவணங்கள் என்னென்ன போன்ற விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெளிவுபட அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இல்லம் தேடி வாக்காளர்களுக்கு பணம் செல்லும் வழியை கண்காணித்து தடுத்து நிறுத்தாமல் பாரம்பரியமாக தொழில் வணிகம் செய்பவர்களை பிடித்து வைத்துக் கொண்டு அலைகழிக்கும் செயலை கைவிட வேண்டும் என இக் கூட்டத்தின் வாயிலாக கோருகிறோம்.
2) தொழில் வணிகம் செய்பவர்களை மிரட்டி மாமூல் கேட்பது, கட்டாய நன்கொடை கேட்பது, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களை சமூக விரோத கும்பல்கள் செய்து வருகின்றன, சட்ட விரோதமாக செயல்படும் இக்குழுவினர் சிலர் அரசியல் கட்சிகளை பின்புலமாக கொண்டு செயல்படுகின்றனர். இது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விரைவாக விசாரித்து உரிய தண்டனையை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு தொழில் வணிகம் செய்பவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்ட அமலாக்கத்தை கொண்டு வர வேண்டும் என கோருகிறோம்.
3) கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த அன்றைய எதிர்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்றாண்டுகளை எட்டும் நிலையில் கும்பகோணம் மாவட்ட கோரிக்கை குறித்து அறிவிக்கை ஏதும் வெளியிடாமல் இருப்பது நியாயமல்ல, ஏற்புடையதல்ல எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றி கொடுக்க வேண்டுகிறோம்.
4) கும்பகோணம் – ஜெயங்கொண்டம் -விருத்தாசலம் இணைப்பு நீடாமங்கலம் வரையிலான புதிய இரயில் பாதை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2024 மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் உயர்திரு கு.அண்ணாமலை அவர்கள் பல முறை உறுதியளித்தார் ஆனால் நடைமுறையில் அவ்வாறு எவ்விதமான அறிவிப்பும் மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என இக் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
5 ) சாலை அமைக்கும் நடைமுறையில் எவ்விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் மிக உயரமாக சாலையை அமைத்து மக்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து ஈட்டிய பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சாலைக்கு கீழே புதை குழிக்குள் தள்ளப்படுகிறது. தங்களது சொந்த ஆதாயத்திற்காக திட்டமிட்டே இரவோடு இரவாக சாலையை அமைக்கும் படுபாதக செயலில் ஈடுபடுகின்றனர். அரசு நிர்வாகம் இத்தகைய மக்கள்விரோத செயலில் ஈடுபட கூடாது என இக் கூட்டத்தின் வாயிலாக கோருகிறோம்.
6) புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகங்களுக்கு மீண்டும் வழக்கமான கட்டண முறையில் இணைப்பு பெற கட்டட முடிவுறு சான்று தேவை என மின்வாரியம் வலியுறுத்துவதால் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் கட்டண முறையில் மாற்றம் பெற இயலாமல் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம்,பல இலட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதனால் தொழில் வணிகம் செய்பவர்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளனர். இது குறித்து பலமுறை மின்வாரிய அமைச்சரிடமும், உயர் அதிகாரிகளிடமும் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோருகிறோம். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.