கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு… வழிக் கோணல்மானல் ஆச்சு…
பாஜகவில் 25 ஆண்டுகளாக இருந்த வர் நடிகை கவுதமி. அந்த கட்சியின் இளைஞர்அணி துணைத் தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பல மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகினார். இந்நிலையில், நேற்று மாலை சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவர் தினமலருக்கு அளித்திருக்கும் சிறப்பு பேட்டி…கேள்வி : அதிமுகவில் இணைந்தது ஏன் ? பதில் : என் மனதிற்கும், என் கொள்கைக்கும் சரியெனபட்டது. அதனால் இணைந்தேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் உங்களுக்கு பழக்கம் உண்டா ? அவரை நேரில் சிலமுறை சந்தித்து பேசி யிருக்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக அவரை நேசிக்கிறேன். அவரை பார்த்து வியந்து இருக்கிறேன். அவர் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி.
அதிமுக பொதுச் செயலாளர் என்ன சொன்னார் ? வரவேற்றார். சிறப்பாக செயல்பட சொன்னார்.
உங்களுக்கு அதிமுகவில் ஏதாவது பொறுப்பு தரப்பட்டுள்ளதா ? லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா? இப்போதுதான் இணைந்தேன். அதற்குள் பதவியா ? அதற்காக நான் சேரவில்லை. கட்சித் தலைமை சொன்னால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்.
பாஜகவில் இருந்தபோது, உங்களின் சொத்து பிரச்னைக்காக அங்கே யாரும் உதவவில்லை என்று சொல்லிவிட்டு வெளியேறினீர்கள் . அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்வீர்களா ?சொத்து பிரச்னை, என் தனிப்பட்ட விஷயம். அந்த பிரச்னைக்காக நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை. பிரச்சார விவகாரத்தில் அதிமுக கொள்கை, தலைமை சொல்படி நடப்பேன். நான் யாருடனும் சண்டை போட அதிமுகவில் சேரவில்லை. என்னிடம் ஏன் கடும் விமர்சனத்தை எதிர் பார்க்கிறீர்கள்.
சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகரில் நீங்கள் போட்டியிட இருந்தீர்கள். அது நடக்கவில்லை. இப்போது லோக்சபா தேர்தலில், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா ? நான் விருதுநகரில் வேட்பாளராக பணியாற்றவில்லை. அந்த தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினேன். இப்போது தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். தேர்தலில் சீட் கொடுப்பது பற்றி பின்னர் பார்ப்போம். இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.