கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பால் எந்த பயனும் இல்லை அரசர் அதிரடி…
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலோடு, மாவட்ட தலைவர்கள் பரிந்துரைப்படி, திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தலைவர்கள், மாவட்ட அளவில் துணை தலைவர், செயலாளர், பொதுச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 45 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர், திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடந்த இந்த நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்று பதவி நியமன கடிதத்தை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்பி திருநாவுக்கரசர்… தேர்தல் பூத் கமிட்டி அமைப்பதற்கு மாநகரில் மட்டும் ஆன்லைன் வாயிலாக 500 பேர் பதிவு செய்துள்ளனர். இது தவிர, புறநகர் பகுதியிலும் பூத் கமிட்ட உறுப்பினர்களுக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கட்சியில் உள்ளவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட ஆசைப்படுவதில் தவறு இல்லை. விருப்ப மனு வாங்கி சீட் கேட்டு முயற்சி செய்வதிலோ தவறு இல்லை. நிறைய பேர் தேர்தலில் சீட் கேட்டால், அந்த கட்சி வளர்ச்சி அடைந்திருப்பதாகத் தான் அர்த்தம்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அகில இந்திய கட்சி, மாநில கட்சிகளாக, பதிவு செய்த கட்சிகள் உள்ளன. பதிவு செய்யாத கட்சிகளுக்கு சுயேச்சை சின்னம் வழங்கப்படும். இதில் பதிவு செய்த கட்சிகளும், பதிவு செய்யாத கட்சிகளும் ஒரே சின்னத்தை கேட்டால் குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படும்.
திருச்சியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் எம்.பி.,யாக இருப்பதால் மீண்டும் போட்டியிட விருப்பப் படுகிறேன். இதே போல் மற்றவர்களும் விருப்பப்படலாம்.
கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி, தொகுதி பங்கீடு செய்து கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும். தற்போது, கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. அனைத்து கட்சிகளும் பேசி முடித்த பின், அந்தந்த கட்சித் தலைவர்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.
தேர்தல் நெருங்குவதால், காஸ் சிலிண்டர் விலை குறைப்பு பற்றி அறிவிப்பு செய்துள்ளார். மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு இல்லை. வந்தால், மீண்டும் விலையை உயர்த்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால், ஆட்சிக்கு வரும் கட்சி தானே கஷ்டப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த சுமை காங்கிரஸ் கட்சி தலையில் விழும். வரும் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், விலை குறைப்பின் மூலம், 100 ரூபாய் பயனாளிகளுக்கு சென்று சேராது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சலுகை அறிவிப்பதால், எந்த பயனும் இல்லை.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி நான்கு, ஐந்து முறை மட்டுமின்றி நாற்பது, ஐம்பது முறை வந்தாலும் பா.ஜ.கவுக்கு எந்த முன்னேற்றமும் வரப் போவதில்லை. தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா ? என்று கேட்பது தவறு. அதனால், மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அதை மறுத்துள்ளார்; அது சரிதான். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.