கொடைக்கானல் : தனியார் பள்ளிக்கு சொந்தமான சுமார் 100 அடி நீளமுள்ள சுவர் சரிந்து விபத்து…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய குடியிருப்பு பகுதியான நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம், இங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட தகர கடைகள் அமைத்து அதனை வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடைக்கு பின்புறம் இருக்கக்கூடிய காலி நிலத்தில் சுமார் 100 அடி நீளத்தில் சுவர் கட்டப்பட்டு வந்தது, இந்தநிலையில் நேற்று நண்பகல் வேளையில் திடீரென அருகே இருந்த கடைகள் மீது அந்த சுவர் சாய்ந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இதில் அங்கு இருக்கும் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்துள்ளது. இரண்டு கடையில் இருந்த இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் சரிந்த சுவரின் ஒரு பாதி மீண்டும் சரியும் நிலையில் ஆபத்தான முறையில் இருப்பதால் அதன் அருகே இருக்க கூடிய கடைகளிள் உள்ள பொருட்களை மீட்டு வேறு இடத்திற்கு வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர்.
அதிஷ்டவசமாக வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.