கொதிக்கும் கோலிவுட் ராசுனாலே ரவுசுதான் போல…
சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்தவர் ஏ.வி.ராஜு. சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்வதாகவும், அதிக அளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனால் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கியது. இதனால் கடுப்பான ராஜூ, எடப்பாடி பழனிசாமி பற்றி கண்டபடி பேசியதுடன் வெங்கடாச்சலத்தின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார்.
அத்தோடு நிற்காமல் 2017ம் ஆண்டு கூவத்தூரில் நடைபெற்ற சில சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி அளித்தார். அந்த வீடியோ பேட்டியில், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்தையும், பிரபல நடிகையையும் தொடர்புப்படுத்தி பேசியிருப்பவர், ஒரு காமெடி நடிகர் பற்றியும் பேசியிருக்கிறார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
‘வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது குறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் சேரன்.
ராஜூ குறிப்பிட்டிருக்கும் நடிகை, ‘இது தொடர்பாக சட்டப்பூர்வமான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமாத்துறையினர் மட்டுமல்லாது ரசிகர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள். விரைவில் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடிக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.