சபாஷ் மூங்கிலில் இருந்து எத்தனால்…
மத்தியஅரசின் கொள்கையால், எத்தனால் தேவை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வழக்கமாக சர்க்கரைத் தயாரிப்பில் உபரியாக கிடைக்கும் மொலாசஸ் கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்ட நிலையில், நேரடியாக சர்க்கரை மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக அதிகளவு எத்தனால் தயாரிக்கப்பட்டது.
இந்த அரவைப்பருவத்தில், கரும்பு விளைச்சல் குறைவாக உள்ளதால் நேரடியாக கரும்புச் சாற்றில் இருந்து எத்தனால் எடுப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், எத்தனால் உற்பத்தியாளர்கள் பிற பொருட்களில் இருந்து எத்தனால் உற்பத்தியை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக உபரி தானியங்கள் கோதுமை, மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பு இப்போது வேகம் எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் செயல்படும் நுமாலிகர் ரீபைனரி லிமிடெட் என்ற சுத்திகரிப்பு நிறுவனம், போர்டம் மற்றும் செம்போலிஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பச்சை மூங்கில்களில் இருந்து எத்தனால் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மத்திய அரசின் அனுமதி ஆகியவை கிடைத்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்தில் இருந்து மூங்கில் எத்தனால் உற்பத்தி தொடங்கி சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ள நிலையில், எத்தனால் தயாரிப்புக்கு பயன்படும் வகையில், கலப்பின மற்றும் அதிக அடர்த்தி தன்மை கொண்ட மூங்கில்கள் இதற்கென சாகுபடி செய்யப்பட்டு, பரிசோதனை முயற்சிகள் வெற்றிக்கண்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை, அசாம் நுமாலிகர் ரீபைனரி திட்டத்தை முன்னெடுத்துள்ளது.