சீனாவிற்கு செக்கா… அலறும் மொபைல் நிறுவனம் !!
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி கொரியா, சீனா நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இதில், சீனாவின் ஜியோமி நிறுவனம் மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 18 சதவீதம் பங்களிப்பை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டில் செல்போன் சந்தையை மேம்படுத்துவது தொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சகம், உள்நாட்டில் செல்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவ னங்களிடம் கருத்துக்களை கோரியிருந்தது. இதன் ஒரு பகுதியாக ஜியோமி நிறுவனம் கடந்த 6ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘2020ம் ஆண்டில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து 2 நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் தொழில் ரீதியான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சீனாவின் செல்போன் நிறுவனங்களில், நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டுகளும், செல்போன் நிறுவனங்களை ஸ்தம்பிக்கச்செய்துள்ளன.
இதே காலகட்டத்தில், உள்நாட்டில் செல்போன்களை வடிவமைத்தாலும், சில முக்கியமான உதிரிபாகங்கள் சீனா, தென்கொரியாவில் இருந்து வரவேண்டியுள்ளது. இந்த குறிப்பிட்ட செல்போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். இந்தியாவில் செல்போன் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள, நிறுவனங்களுக்கான நெருக்கடியை குறைக்க வேண்டும். இதுபோன்ற நெருக்கடிகளால், சீனாவில் இருந்து செல்போன் உதிரிபாகங்களை வினியோகம் செய்யும் நிறுவனங்கள் பெரும் தயக்கத்தில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.