செவிசாய்க்குமா அரசு … கிராம பூசாரிகள் கோரிக்கை !
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, எந்தவிதமான வரையறையும் இன்றி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமக் கோவில் பூஜாரிகளுக்கும், மாத ஊக்கத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெரும் பூசாரிகளின் மறைவுக்கு பின், அவரது மனைவிக்கு இச்சலுகை வழங்கப்பட வேண்டும். பூசாரிகள் நலவாரியம் சீர்படுத்தப்படவேண்டும் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கிராமக்கோவில் பூசாரிகள் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரியம் இதுவரை செயல்படாமல் முடங்கியே உள்ளது.
பூசாரிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்களின் பதிவு புதுப்பித்தலில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நலவாரியக்குழு அமைக்கவும், சிறுபான்மையோர் நலவாரிய பதிவை போல், பூசாரிகள் நல வாரியத்தின் விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கிராமக்கோவில்களில், ஒரு விளக்கு எரியும் வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே அனைத்து கிராமக் கோவில்களுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும். வயது முதிர்ந்த கிராமக் கோவில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை, ஒரு லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது, மதுரை மாநாட்டில், பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் 5,000 ரூபாய் வழங்கப்படும், என்று அறிவித்தார்.
ஆனால், 23 ஆண்டுகளுக்குப்பிறகும் ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தை எட்டவில்லை. எனவே, மாநிலத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்துக் கிராமக்கோவில் பூசாரிகளுக்கும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.