ஜம்ப் லிங்கம்… காங்கிரஸ் கரைச்சல் ! செல்வப்பெருந்தகை தலைவரானார் !!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அதிரடி காட்டியுள்ளது காங்கிரஸ் தலைமை. 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், அடுத்த சில நாட்களில் அக்கட்சிக்காக சட்டமன்ற குழுத்தலைவரானார் செல்வப்பெருந்தகை. 2019ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல் கடந்த சில மாதங்களாகவே கசிந்துவந்த நிலையில். சத்தமே இல்லாமல் புதிய தலைவருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை.
தேசிய கட்சியின் தமிழக தலைவராக அமர்ந்துள்ள செல்வப்பெருந்தகை பிறந்தது என்னவே ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில்தான். சென்னைக்கு அருகே படப்பை மணிமங்கலத்தில் பிறந்த இவர், சட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். புரட்சி பாரதம் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். 16 ஆண்டுகால ரிசர்வ் வங்கி பணிக்குப் பிறகு 2001 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தேர்தல் அரசியலில் நுழைந்தார்.
அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த இவர், சில ஆண்டுகளில் முக்கிய பதவிகளை வகித்து பொதுச்செயலாளராக உருவெடுத்தார். 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விசிக சார்பில் வென்றவர்கள் இருவரில் ஒருவராக இருந்த செல்வப்பெருந்தகை, அப்போது விசிகவின் சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டார்.
திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விசிகவில் இருந்து விலகியவர், பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அதன் மாநில தலைவர் ஆனார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தவர், 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் செங்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர், 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டவர் கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
அதனைத் தொடர்ந்தே, கட்சியின் சட்டமன்றத் தலைவராக பொறுப்பேற்றார். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனை கட்டுப்படுத்த காங்கிரஸ் தலைமையுடன் பேசி திமுகவின் முக்கிய புள்ளிகள்தான் இவருக்கு இப்பொறுப்பை பெற்றுத்தந்ததாக கூறப்படுகிறது இல்லையேல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அழுகிரியை ஏன் அதிரடியாக நீக்க வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள் உண்மையான கதர் வட்டாரங்கள். இனி காங்கிரஸ் கல கலக்கும் என ஒரு தரப்பினரும் கலகலத்துப்போகும் என ஒரு தரப்பும் பந்தயம் கட்டி வருகிறார்கள்.