ஜெயம்ரவியின் சைரன் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில்…
தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படமான சைரன் திரைப்படம் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் டீசரில் வெளியான ஜெயம் ரவியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், பெரும் வரவேற்பை குவித்தது. ஜெயம் ரவி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு பாத்திரங்களில் தோன்றுகிறார்.
ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம்ரவி பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லரை, விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது. இதுவரையிலான ஜெயம்ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் சைரன் படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் சைரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.