தண்ணீருக்காக கண்ணீர் ! மறியல் போக்குவரத்து பாதிப்பு !!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என கூறிய பின் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.