துறையூர் : தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசிய மாணவனை குண்டுக்கட்டாக தூக்க வலை !!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் துறையூர் அருகே காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.
கல்லூரியில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில் அங்கு சக மாணவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாணவன் பவித்திரன் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த ஆசிரியர்கள் மாணவன் பவித்திரனை கண்டித்துள்ளனர். ஆத்திரமடைந்து கல்லூரியை விட்டு வெளியேறிய மாணவன் பவித்ரன் இரவு நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி நுழைவாயில் முன்பு சென்று கற்கள் ஆகியவற்றை எடுத்து கேட்டின் மீது வீசியவர் பின்னர் காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியிட்டு தீ வைத்து கல்லூரி நுழைவாயில் மீது வீசியதாக கூறப்படுகிறது.
இதில் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, குண்டு வீசிய மாணவனை குண்டுக்கட்டாக தூக்க காவல்துறை தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.