தேர்தல் பத்திர விவகாரம்… எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு !

0

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு பதிலாக, தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுக்கும் திட்டதை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. 2018ம் ஆண்டு முதல் அமலில் உள்ள இந்த திட்டத்தின் மூலம் எஸ்பிஐ வங்கி ரூபாய் 1000 முதல் ரூபாய் 1 கோடி வரை தேர்தல் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பொது நல வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் பத்திரங்களை தடைசெய்தது. அத்துடன், இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் மாதம் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து அந்த தகவல்களை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க 4 மாத கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

logo right

இந்த மனு மீதான விசாரணை இன்று மார்ச் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது எஸ்பிஐ வங்கியில் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி, தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அவை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நீதிமன்றம் உத்தரவிட்டபடி தகவல்களைச் சேகரிப்பதில் சில பிரச்சினைகள் இருக்கிறது. என்றார். மேலும், தேர்தல் பத்திரம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் எஸ்பிஐ வங்கி தரப்பில் இல்லை என்றும் எஸ்பிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்பிஐ வங்கிக்கு கொடுத்தோம். அதனை பின்பற்றுவதற்கு கால அவகாசம் கோருவது என்பதை எந்த வகையில் ஏற்பது என கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது அந்த தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது. இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை. ஏற்கெனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். அப்படி இருக்கும்பொழுது அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன் ? என சரமாரியாக கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தபின் அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்கக் கூடியது. அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது? என்றார்.

அதேசமயம், தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வரும் ஜூன் 30ம் தேதி வரை 4 மாதம் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ வங்கி நாளை மாலைக்குள் தேர்தல்பத்திர விவரங்களை வெளிவிட வேண்டும். மார்ச் 15ம் தேதிக்குள் அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.