நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தெற்கு ரெயில்வே மேலாளர் ஆலோசனை !
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.திருநாவுக்கரசர் (திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி), கார்த்தி ப சிதம்பரம் (சிவகங்கை மக்களவைத் தொகுதி), டாக்டர் தொல். திருமாவளவன் (சிதம்பரம் மக்களவைத் தொகுதி), திரு.வி.வைத்திலிங்கம் (புதுச்சேரி மக்களவைத் தொகுதி), எஸ்.கல்யாணசுந்தரம் (ராஜ்யசபா), திரு.எம்.செல்வராஜ் (நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி), டாக்டர்.டி.ரவிக்குமார் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி கோட்ட கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் மற்றும் தெற்கு ரயில்வேயின் பல்வேறு துறைகளின் முதன்மை தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று, தெற்கு ரயில்வேயின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை விவரித்தார்.
திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் நிறைவடைந்துள்ள முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பிரிவில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் கும்பகோணம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக 15 ரயில் நிலையங்களில் தஞ்சாவூர் , மயிலாடுதுறை , விழுப்புரம் , அரியலூர், லால்குடி, சிதம்பரம், காரைக்கால், ஸ்ரீரங்கம், மன்னார்குடி, போளூர், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருவாரூர் , வேலூர் கண்டோன்மென்ட் & விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் அமிர்த் பாரத் நிலையங்களின் கீழ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார் இப்பணிகள் மார்ச் 2024க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயில் சேவைகள், புதிய ரயில்கள் அறிமுகம், ஏற்கனவே உள்ள ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள், புதிய ரயில் பாதைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், தற்போதுள்ள ரயில் சேவைகளின் விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், இரட்டிப்பு (விழுப்புரம்) தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதம் நடத்தினர். தஞ்சாவூர் மின்மயமாக்கல் பணிகள், சாலை மேல் பாலங்கள்/பாலங்களுக்கு அடியில் சாலை அமைத்தல் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே திட்டங்களை விரைந்து முடித்தல் போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.