நாடாளுமன்ற தேர்தல் : பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக !
தி.மு.க.-காங்கிரஸ் ஒரு அணியாக களம் காண உள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அந்த கட்சி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது, அதே நேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள அ.தி.மு.க.வை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவலும் வெளியாகி வருகின்றன. பா.ஜனதா கட்சி கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகள் பா.ம.க. வலுவாக உள்ள தொகுதிகளாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி அரசே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா கட்சி கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியையும் கேட்டு பெற்று விடலாம் என்று பா.ம.க. கணக்கு என்கிறார்கள்.
அதேபோல தே.மு.தி.க.வுடனும் தொகுதி பங்கீடு தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தையை பா.ஜனதா கட்சி நடத்தி முடித்திருப்பதாகவும், கூட்டணியில் 3 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தொகுதிகள் எது என்பது குறித்த பட்டியல் இறுதி செய்யப்படவில்லை, நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை கேட்டு பெற வேண்டும் என்பதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதுவும் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டன, பிரதமர் மோடி, விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.வினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வும் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி ஏறக்குறைய உறுதியாகிட்டதாம் கடந்தமுறை கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியை எடப்பாடி பிரித்து கொண்டபோன கோபத்தில் தினகரன் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். திருச்சி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்படலாம் எனத்தெரிகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் அவருடைய மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று தெரிகிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இருவருக்கும் எடப்பாடி பழனிசாமியே தற்போது பொது எதிரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட போவதாக இருவரும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
எனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதே இவர்களின் கணக்காக உள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கூட்டணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இருவருமே உறுதியாக உள்ளனர்.
ஜி.கே.வாசனின் த.மா.கா., பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கும் தலா ஒரு இடங்களை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களொடு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆகியோரையும் கொண்டுவந்துவிட்டால் தென்மாவட்டங்கள் கைகூடும் என்கிறார்கள்.
அண்ணாமலையின் அதிரடி பேச்சும் என் மண் என் மக்கள் யாத்திரையும் கட்சியை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சென்றிருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள், திரைமறைவில் நடந்துள்ள இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் இறுதி செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட பிரசாரத்தை தொடங்கவும் பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது.
அடுத்த மாதம் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை முடித்துவிட திட்டமிட்டு உள்ளது என்கிறார் கமலாலய நிர்வாகி ஒருவர், இதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற அதிரடியாக களம் இறங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் செய்திகளே அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்திர பகைவனும் இல்லை என்பது சட்டமன்ற தேர்தல் அல்ல நாடாளுமன்ற தேர்தலுக்கும் பொறுந்தும் என கண்சிமிட்டினார் அந்த திருப்பதி வாழும் பெயர் கொண்ட பிரமுகர்.