நாளாம் நாளாம் திருநாளாம்… மோடி வருகிறார் !
பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதும், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள், விழாக்கள் நடந்து வருகின்றன. இதில் மார்கழிமாதம் 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாகும். 108 வைணவ திவ்வியதேசங்களில் காக்கும் கடவுளான திருமால் கோயில் கொண்டுள்ளார். இந்த ஊர்களில் கோயில் கொண்டுள்ள பெருமாள், அவரின் தனிச்சிறப்பு ஆகியவை குறித்து 12 ஆழ்வார்கள் 4 ஆயிரம் பாசுரங்களில் ஏற்றிப்பாடியுள்ளனர். இந்த பாசுரத் தொகுப்பிற்கு நாலாயிர திவ்விய பிரபந்தம் என்று பெயர். ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் 20 நாட்களில் திவ்விய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் பல்வேறு பகுதிகளாகப்பிரித்து தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பெருமாள் முன்னர் அரையர்கள் எனப்படும் சிறப்பு பிரிவினர் அபிநயத்தோடு பாடுவார்கள். இதனால் இந்த உற்சவத்திற்கு திருவத்யயன உத்சவம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் திருநாள் கடந்த 13ம் தேதி துவங்கியது. முன்னதாக 12ம் தேதி இரவு உற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியாக ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்பட்டது.
பகல்பத்து : இருபது நாட்கள் இடைவிடாது நடக்கும் இந்த உற்சவம் பகல்பத்து, ராப்பத்து என இருபகுதிகளாக பிரித்துக் கூறப்படுகிறது. இதில் டிசம்பர் 13ம் தொடங்கி 22ம் தேதி வரை பகல் பத்து எனப்படும் திருமொழித்திருநாள் நடக்கிறது. இந்நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் பல்வகை உயர்ந்த திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தானமிருப்பார். அப்போது அரையர்கள் நம்பெருமாள் முன்னர் ஆழ்வார்களின் திருமொழிப்பாசுரங்களை அபிநயத்தோடு பாடிக்காட்டுவர். அரையர்களின் இசையைக் கேட்டவாறு மாலைவரை அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் நம்பெருமாள் மாலை 6.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு உபயங்கள் கண்டருளிவாறு இரவு 9.30 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.
மோகினி அலங்காரம் : பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான்று உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பரமபதவாசல் திறப்பு : வைகுண்ட ஏகாதசிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு இவ்வாண்டு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை நடந்தது. அன்று அதிகாலை 3 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன், கொண்டை, கிளிமாலை மற்றும் ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களின் கண்களை நிறைக்கும் அழகுடன் மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்படுவார். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பெருமாள் வெளியில் வந்தார். காலை 7.30மணியளவில் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு இரவுவரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அன்று திருவிழாவின் இரண்டாவது பகுதியான ராப்பத்து துவங்கும். இந்த ராப்பத்து நாட்களில் தினமும் மதியம் 12 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 1 மணியளவில் பரமதவாசலைக் கடந்து 3 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவேயுள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருப்பார். அங்கு அரையர்கள் இரவு வரை திவ்வியப்பிரபந்தத்தின் திருவாய்மொழிப்பாசுரங்களை பெருமாள் முன்னர் சேவிப்பர். இரவு 9.30மணிவரை அங்கிருக்கும் நம்பெருமாள் அதன்பின் புறப்பட்டு வீணை ஏகாந்தத்துடன் மூலஸ்தானம் சேருவார்.
ராப்பத்து நாட்களில் 7வது நாளில் நம்பெருமாளின் திருக்கைத்தல சேவையும், 8ம் நாள் வேடுபறி எனப்படும் குதிரை வாகன வையாளி வைபவமும் நடைபெறும், 10ம் நாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டபின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானமிருப்பார். அங்கு அவருக்கு நள்ளிரவு வரை அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது.
ஆழ்வார்மோட்சம் : இரவு அங்கேயே தங்கியிருக்கும் பெருமாள் முன்னர் அதிகாலை 6 மணியளவில் ஆழ்வார்களின் முக்கியமானவரான நம்மாழ்வார் எழுந்தருள்வார். அதனைத் தொடர்ந்து அவரை வைகுந்தத்திற்கு அனுப்பும் ஆழ்வார்மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவர் ரங்கநாதருக்கு பகல்பத்து துவக்க நாளான டிசம்பர் 13ம் தேதி முதல் முற்றிலும் நல்முத்துக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தங்கியில் ஜனவரி 1ம் தேதி காலை வரை ரங்கநாதர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாசதி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த 20 நாள் உற்சவத்தில் கலந்து கொள்ள தேசிய அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் கூடுவார்கள்.
ஸ்ரீராமரின் குலதெய்வமாக ரெங்கநாதர் என நம்பப்படுவதால் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிற 20ம் தேதி வந்து அரங்கரை தரிசனம் செய்யவிருக்கிறார். முதல்வராக ஜெயலலிதா இருந்த காலமாகட்டும் தோல்வியால் துவண்ட காலமாகட்டும் அரங்கனை ஆண்டுக்கு ஒருமுறையாவது தவறாமல் தரிசனம் செய்வதை வழக்கமாக்கொண்டிருந்தார் என்பதும் ஸ்ரீரங்கத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதேபோல ஸ்ரீரங்கத்தில் இருந்த அத்தனை டாஸ்மாக் கடைகளையும் அப்புறப்படுத்தவும் ஆணையிட்டார், பிரதமர் மோடி வந்து சென்றபின் மேலும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.