நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை !!

0

திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும், காசியில் இறந்தால் முக்தி, ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமாக திகழ்கிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். அம்மனின் 51 சக்திப்பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதே போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸவரராகவும், அம்பிகை அபிதகுசாஅம்பாள் அம்பிகையாவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறர்கள். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (ரமண மகரிஷி தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் இது. சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம் முறையிட்டனர். அப்போது சிவன் யார் தனது அடிமுடியை கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். பிரம்மா அன்னப்பறவயாக உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பினார். அவராலும் காண முடியவில்லை என்றார். சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். சிவபெருமானும் ஜோதி வடிவிலிருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார். அந்த மலை தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார். இறைவன் இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து அபிதாகுசாஅம்பாள் தனிக் கோவிலில் கருவறையில் காட்சி தருகிறாள். பிரம்மா தன்னால் அடிமுடியை காணவில்லை என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும் தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து தான் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார். இதையறிந்த சிவன் கோபமுற்று இனி உனக்கு பூமியில் கோயிலோ, பூஜையோ கிடையாது என சாபமிட்டார். அதே போல் தாழம்பூவையும் இனி தனது பூஜையில் உன்னை பயன்படுத்தமாட்டார்கள் என்று கூறிவிட்டார். அதன் காரணமாகத்தான் இன்றளவும் சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும் படைக்க மாட்டார்கள். பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகா தீபம், பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், ஆகிய திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு திருவிழா இத்தலத்தில் நடந்து கொண்டே இருப்பது சிறப்பு. மாதம் இருமுறை பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரகன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. இம்மலையானது 2688 அடி (800 மீட்டர்) உயரம் கொண்டது. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டர். இந்த பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1008 லிங்கம் அமைந்திருக்கிறது என்பர். இந்த மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம் என்பது சிறப்பு, கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் அமைந்த அருமையான திருத்தலமாக இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம். பின்னர் அண்ணாமலயாரையும், உண்ணாமுலைம்பிகையையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும்.எந்த நாளில் கிரிவலம் மேற்கொண்டால் என்ன பலன் கிட்டும் ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும், திங்கள்கிழமை – இந்திர பதவி கிடைக்கும், செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும், புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும், வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும், வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும், சனிக்கிழமை – பிறவிப்பிணி நீங்கும். கிரிவலப்பாதையில் காலணிகள் அணியக் கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். எல்லா தினங்களிலும் கிரிவலம் செய்யலாம். ஆனாலும் பௌர்ணமி நாளில் இம்மலையை வலம் வந்தால் ஏற்படும் நன்மைகளும், பலன்களும் ஏராளம். கார்த்திகை மகாதீபம் இக்கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளன்று கோவில் கருவறையில் அதிகாலை நாலு மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2688 அடி கொண்ட மலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது இறைவன் மற்றும் இறைவிக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, தீபங்களையும் மேளதாளத்துடன் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பம் அருகேயுள்ள அகண்ட தீபம் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். இது இரண்டு நிமிட தரிசனம் தான். அப்போது வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலையில் தயாராக இருப்பவர்களுக்கு சைகை காட்டுவார்கள். உடனே மகாதீபம் ஏற்றப்படும். மக்கள் அண்ணாமலைக்கு அரோகரா என கோஷமிட்டு தரிசனம் கண்டதும் தங்களது இல்லங்களுக்கு சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். 7அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 டன் பசுநெய், 1500 மீட்டர் காடாதுணிதிரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இங்கு இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது முன்வினைப் பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதே இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம். திருவண்ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ்வரரையும், அன்னை அபிதாகுசா அம்பாள்யையும் வழிபட்டால் மனத்துயரங்கள் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு என எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நீண்ட நாள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், குடும்பப் பிரச்னைகள், பொருளாதாரப் பிரச்னைகள், மன உளைச்சல்கள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் போக்கும் தலம் இது. அதோடு பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலையளித்து முக்தியையும் தருகிறது. தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!

Leave A Reply

Your email address will not be published.