பரமபதவாசல் திறப்பு பக்தர்கள் பரவசம்…
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவத்யயன உற்சவம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. முதல் 5 நாட்கள் பகல்பத்து திரு மொழி திருநாளாக கொண்டாடப்பட்டது. விழாவின் இரண்டாவது பகுதியான ராப்பத்து திருவாய்மொழி திருநாள் நேற்று ஏகாதசியன்று பரமபதவாசல் திறப்புடன் தொடங்கியது.
மாலை 5 மணியளவில் உற்சவநாச்சியார் சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு திருச்சுற்று வலம்வந்து பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள பரமபதவாசல் பகுதிக்கு வந்தார்.
அங்கு வேத விர்ப்பணர்கள் பாசுரம் முழங்க 6 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தாயே சரணம், தேவி சரணம் என பரவசத்துடன் முழங்கியவாறு பரமபதவாசலை கடந்து வந்த கம லவல்லிநாச்சியாரை சேவித்தனர்.
அதன்பின் நாச்சியார் வெளியே வந்து திருவாய்மொழி மண்டபம் சேர்ந்தார். அங்கு ராப்பத்து உற்சவ சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.