பான் கார்டு பதட்டம் வேண்டாம்…
ஆதாரைப் போலவே, பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிக முக்கிய ஆவணமாக இருப்பதால், பான் கார்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வங்கிக் கணக்கைத் திறப்பது, கடன் பெறுவது, நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகள் மட்டுமல்லாது சொத்து வாங்க விற்க போன்ற பணிகளுக்கு பான்கார்டு அடிக்கடி தேவைப்படுகிறது. இது நிதி பரிவர்த்தனைகளுக்கு மட்டுமின்றி கடன் வரலாற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளுக்கும் இன்றியமையாத ஆவணமாக திகழ்கிறது. நிகழக்கூடாது நிகழ்ந்துவிட்டால் , ஒருவேளை பான் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பான் கார்டுகளை இன்னும் பயன்படுத்த முடியுமா, அவ்வாறு செய்வது சட்டப்பூர்வமானதா? இந்த விஷயத்தில் ஆழமாகச் சென்று, அட்டைதாரரின் மறைவுக்குப் பிறகு பான் கார்டைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகளைப் புரிந்துகொள்ளுங்கள். இறந்த நபரின் பான் கார்டை என்ன செய்வது ? ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், அவர்களின் பான் கார்டை உடனடியாக திருப்பித் ஒப்படைப்பது நல்லது. இது முக்கியமானதும் கூட, ஏனெனில் இது இறந்த நபருடன் தொடர்புடைய நிதி விஷயங்களைத் தீர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. இது வங்கியிலிருந்து பணம் எடுப்பது அல்லது பான் கார்டு-இணைக்கப்பட்ட பாலிசிகளைப் பெறுவது போன்ற செயல்பாடுகளை எளிதாக்குகிறது. சரி பான் கார்டைத் ஒப்படைப்பது எப்படி இதுதானே உங்கள் கேள்வி ? நீங்கள் சம்மந்தப்பட்ட மதிப்பீட்டு அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அந்தக் கடிதத்தில், பான் கார்டைத் திருப்பிக் கொடுத்ததற்கான காரணத்தையும், இறப்புச் சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். முழு சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு, பான் கார்டு தகுதியிழப்பு செய்யப்பட்டு உங்களிடமே மீண்டும் அத்தாட்சி கடித்ததுடன் ஒப்படைக்கப்படும் இதற்கு சில நாட்கள் நீங்கள் காத்திருக்க நேரிடும் அவ்வளவுதான்.