பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ புதிய உலக சாதனை !!

0

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இமானின் தந்தை ஜெ. டேவிட், மனைவி அமேலியா மற்றும் மகள் நேத்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இமான், இன்ப அதிர்ச்சிக்கு பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது 23 வருட சினிமா பயணத்தில் இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக இருக்கும் என்றார். இத்தனை வருடங்களில் நான் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சில பிறந்தநாள்கள் மகிழ்ச்சியாக இருந்தன, சில அப்படி இருந்ததில்லை, ஆனால் இந்த பிறந்தநாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும், என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பார்த்திபன் சாருடன் பணியாற்றுவது கடினம் என்று பலர் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் கூலாக‌ இருக்கிறார். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் அசாதாரணமானது. ‘டீன்ஸ்’ படத்திற்கு ஓரிரு பாடல்கள் மட்டும் போதும் என்று முதலில் நினைத்தோம், கடைசியில் எட்டு பாடல்களை உருவாக்கி உள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பார்த்திபன் சாரே எழுதியவை. நாங்கள் இருவருமே வித்தியாசத்தை விரும்புவர்கள், எனவே நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றினோம். சில பாடல்களில் அவர் திருப்தி அடைந்த பிறகும், நான் அவற்றை மேலும் மேலும் மெருகேற்றுவேன். பத்திரிகையாளர்கள் தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளால் இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படத்திற்கு ஆதரவு தருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

logo right

உலக சாதனைகள் அமைப்பின் அலுவலர் ஷெரிபா கூறுகையில், திரைப்படத்துறையில் புதிய சாதனையை ‘டீன்ஸ்’ படைத்துள்ளது. இதற்காக படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம். இது ஒரு மகத்தான பெரிய சாதனை, என்றார்.

உலக சாதனை அமைப்பின் பிராந்திய தலைமை அலுவலர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் கூறுகையில், இந்த சாதனைக்கான சான்றிதழை ‘டீன்ஸ்’ குழுவினருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உலகத்திலேயே முதல் முறையாக இத்தகைய ஒரு முயற்சியை ‘டீன்ஸ்’ குழு வெற்றிகரமாக‌ மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி பேசுகையில்‘டீன்ஸ்’ படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அவர் அளித்துள்ளார். பார்த்திபன் மற்றும் அவரது குழுவினர் 10 படங்களுக்கு தேவையான உழைப்பை இந்த ஒரு படத்திற்கு கொடுத்துள்ளனர். அவரது கடின உழைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன், என்றார்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது உரையில், நான் கடந்த 33-34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். அதனால், ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ படங்களுக்குப் பிறகு இப்போது ‘டீன்ஸ்’ செய்கிறேன். இந்தப் படத்தின் முதல் பார்வையை திரையரங்குகளில் வெளியிட நினைத்தேன், ஆனால் அதற்கு சென்சார் சான்றிதழ் தேவைப்பட்டது. சென்சார் அதிகாரிகளை நான் அணுகியபோது, ஒரு படத்தின் முதல் பார்வைக்கு சான்றிதழ் அளிப்பது இதுவே முதல்முறை என்றார்கள். உடனடியாக நான் அதை பெறுவதற்கான வேலையை செய்தேன், இப்படித்தான் இது சாத்தியமானது, என்றார். மேலும் கூறியதாவது…இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தர‌வில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க‌ வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன். இந்தப் படம் சோதனை முயற்சியாக‌ இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இளையராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான் சார் மற்றும் சி. சத்யா சார் ஆகியோருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். இமானுடன் நீண்ட காலமாக பணியாற்ற விரும்பினேன், அது இப்போது தான் நடந்துள்ளது. ‘மைனா’ நாட்களில் இருந்து அவரை நான் ர‌சிக்கிறேன். பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இமான் கொடுக்கிறார். ‘டீன்ஸ்’ படத்தின் தூண்களாக‌ ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரியும் மற்றும் இமானும் திகழ்கிறார்கள். முதல் பார்வையில் அசத்தலான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஏழு சிறந்த பாடல்களை இமான் கொடுத்துள்ளார். பின்னணி இசையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். எனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற நினைத்தேன், ஆனால் இப்போது இமானுடன் தொடர்ந்து பணிபுரிய‌ முடிவு செய்துள்ளேன். அவருடைய அர்ப்பணிப்பு அவ்வாறனது, உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.