பிரதமருக்கு வழங்கப்பட்ட கண்ணன் ஓவியம் !!
குருவாயூர் கிருஷ்ணன் மீது அவர் கொண்டிருக்கும் பக்திப்பயணம், பக்தியால் மாறுகிற உந்துசக்தியின் உதாரணமாக திகழ்கிறது. முக்கிய விழாக்கள் உட்பட குருவாயூரில் பல ஆண்டுகளாக ஸ்ரீ கிருஷ்ண ஓவியங்களை அவர் சமர்ப்பித்து வருகிறார்.பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் மலையாள மொழியிலேயே போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் குருவாயூர் சென்ற பொழுது ஸ்ரீ கிருஷ்ணனின் பெயின்டிங் ஒன்றை பிரதமருக்கு பரிசாக அளித்ததை தொடர்ந்து கேரளா முழுக்க பிரபலமாகி விட்டார், கொயிலாண்டியைச் சேர்ந்த ஜெஸ்னா சலீம் என்ற இளம் பெண். பிரதமரே அதை சமூக வலைதளத்தில் பதிவிட இப்போது மேலும் பிரபலமாகி விட்டார் அவர்.
‘சிறு வயது முதலே அம்மா என்னை ‘கண்ணா’ என்று தான் கூப்பிடுவார். தொடர்ந்து சகோதரர்களும் அப்படியே அழைக்க ஆரம்பித்தார்கள்.இப்போது கணவரும் கண்ணா என்று தான் அன்போடு கூப்பிடுகிறார்.முன் பின் கண்ணனை நேரில் பார்த்ததில்லை. ஏதோ ஈடுபாட்டில்தான் இருபது வயது முதல் கண்ணனின் ஓவியங்கள் வரையத் துவங்கினேன். சில வருடங்களுக்கு முன் ஒரு ஓவியத்தை குருவாயூர் கோவிலில் சமர்ப்பித்தேன். இன்று வரை ஏறத்தாழ ஐந்நூறு கண்ணன் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.
குருவாயூர் வரும் பிரதமருக்கு ஒரு கண்ணன் ஓவியம் பரிசாக அளிக்க வேண்டும் என்று சிலரிடம் விருப்பம் தெரிவித்திருந்தேன். முடிந்தால் பிரதமரையும் பார்க்க வேண்டும் என்றேன் சுரேஷ்கோபி சாரின் மகளது திருமணத்தையும் பார்க்க வேண்டும்’என்ற எண்ணத்தோடு வரைந்த ஓவியத்தையும் எடுத்துக் கொண்டு ஊரில் இருந்து கிளம்பி வந்தேன்.
சுரேஷ் கோபி சாரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் பேச வேண்டிய இடத்தில் பேசி, தேவையான பேப்பர்ஸ் எல்லாம் சரி செய்து கொடுத்து பிரதமரை சந்திக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். தனது மகள் திருமண வேலைப் பளுவுக்கிடையில் என்னையும் ஒரு மகளாக நினைத்து என்னை பிரதமருக்கு முன்னால் அமைத்துச் சென்றார். இதை என்னால் மறக்கவே முடியாது.அவருக்கு நன்றி என்று குதூகலிக்கும் ஜெஸ்னா.
‘ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. என்னோட நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கு. கண்ணனை வரையத் துவங்கிய நாள் முதல் பிரதமருக்கு ஒருபெயின்டிங் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசை நிறைவேறிய சந்தோஷத்திற்காக மீண்டும் குருவாயூரில் ஒரு ஓவியம் வரைந்து அளிக்க உள்ளேன். பிரதமர் வரவேற்பு டென்ஷன் மற்றும் மகளது திருமண வேலைகளுக்கிடையிலும் எனக்கு ஒரு செட் புடவை பரிசாக தந்தார் சுரேஷ் கோபி சார்’ என சிரிக்கிறார் ஜெஸ்னா சலீம் என்ற அந்த இஸ்லாமியப் பெண்.