‘போலியோ இல்லாத உலகம் படைப்போம்’ ஆட்சியர் ஆழைப்பு !
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 922 முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயதிற்குட்பட்ட 102680 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து இன்று வழங்கப்படவுள்ளது. இம்முகாம்கள் காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். அனைத்து பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப்பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் நகர் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, புறநோயாளிகள் வருகை, தொற்றாநோய்களுக்கான வருகை மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் ஆகிய பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சுகாதார நிலையத்தில் உள்ள தடுப்பூசி போடும் இடம். ஆய்வகம். ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார். ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், இணை இயக்குநர் (தொற்று நோய்கள்) மரு செந்தில்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள் ) பானுமதி, மாமன்ற உறுப்பினர் காஞ்சனா, மாநகர நல அலுவலர், கணேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.