போலீஸ் பாதுகாப்பு பேஷனா திருச்சி சூர்யா வழக்கில் நீதிபதி காட்டம் !
திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா மகன் தமிழக பாஜக ஒபிசி மாநில பொதுச்செயலாளர் சூர்யாசிவா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது…எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் பாஜகவில் ஒபிசி அணி மாநில பொதுச்செயலாளராக உள்ளேன். பாஜகவில் சேர்ந்தது முதல், செல்போன் மற்றும் நேரடியாக என்னை பலர் மிரட்டுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கூட, என் கார் மீது பஸ்சை மோதச் செய்து என்னை கொல்ல முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் சேவை, கட்சிப்பணிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். இந்தச்சூழலில் சிலர் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் தன் வாதத்தில், ’மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.
அப்போது நீதிபதி, மனுதாரர் யார் ? என்பது நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் ? இப்போதெல்லம் ஒருவர், 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷனாக மாறிவிட்டது என்றார்.
இதைத்தொடர்ந்து, மனுவை வாபஸ் பெறுவதாக சூர்யாசிவா தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.