மங்கை திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – கயல் ஆனந்தி !
‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். இதில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பேசுகையில் ’சின்ன பட்ஜெட்டில் கார் பயணத்தின் போது நடக்கும் கதை என்று சொல்லி தான் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இப்படத்தை ஆரம்பித்தார். ஆனால் இது இன்று பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறி நிற்கிறது. தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கூட என்னிடம் கேட்டார், என்ன சின்ன பட்ஜெட் என்று சொன்னீர்கள்; இன்று ஷங்கர் சார் படம் போல் வளர்ந்து நிற்கிறது என்று. ஆனாலும் இன்று வரை எதைக் கேட்டாலும் இல்லை என்றே சொல்லாமல் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்துள்ளார்’ என்றார்.
இசையமைப்பாளர் தீசன் பேசும் பொழுது…’கிடா’ படம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படத்தின் மூலமாகத் தான் இப்பொழுது எனக்கு பிற வாய்ப்புகள் வருகின்றன. கிடா பட டீமுக்கு நன்றி. இதற்கெல்லாம் காரணம் எங்கள் தளபதி கார்த்திக் துரை சார் தான். இயக்குநர் குபேந்திரன் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்றார்.
நடிகர் ஆதித்யா கதிர் பேசுகையில்…கார்த்திக் துரை சார் சிவன் கோவில் நந்தி மாதிரி, வாழ்வில் பிறரின் தரத்தை உயர்த்தி மகிழ்ச்சி கொள்பவர். ஆனந்தி நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தை நான் அவருக்காகவே பத்து முறை பார்த்திருக்கிறேன். டப்பிங்கில் கூட எனக்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பேசவே மாட்டார். ஆனால் அவரின் ப்ரேம்கள் பேசும். இசையமைப்பாளர் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். அவருக்கும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
நாயகன் துஷ்யந்த் பேசுகையில்…பொதுவாக நான் நிறைய பேசமாட்டேன். என் குருநாதர் சசிக்குமார் சாருக்கு நன்றி. ஈசன் படத்தில் அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் நான் இன்று இங்கு இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு நாயை வைத்துத் தான் துவங்கினோம்,.என்றார் நகைச்சுவையாக !
நடிகை ஆனந்தி பேசுகையில்…’மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம் என்றதுடன் நீங்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுப்பீர்கள். இப்படத்திற்கும் அந்த வரவேற்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’என்றார்.