மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே திருச்சியில் பேட்டி…
மத்திய பொது துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஆய்வு செய்தார், இதனைத் தொடர்ந்து பெல் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே கலந்து கொண்டு சந்திராயன் 3ல் பொருத்தப்பட்ட பைமெட்டாலிக் அடாப்டரை தயாரித்த திருச்சி பெல் நிறுவன ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் பெல் வளாகத்தில் இயங்கி வரும் வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி முடித்த வெல்டர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் பேசுகையில்… சந்திராயன் 3 விண்ணில் தரை இறங்கி சாதனை படைத்ததில் பெல் நிறுவனத்திற்கு பெரும் பங்கு உண்டு. இதற்காக பாடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். பெல் நிறுவன அலுவலர்கள், சங்க பிரதிநிதிகள் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதில் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சாத்தியமானவற்றை செய்து கொடுப்பேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது எனது துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்திற்கு நான் வருகை புரிந்து ஆய்வு செய்தேன். திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் இங்கு தொடங்கிய வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் பலர் பயின்று வருகின்றனர். இதன் மூலமாக உலகளவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது. இதில் சந்திரன் 3 ன் வெற்றிக்காக திருச்சி பெல் நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது அத்தகைய வெற்றிக்கு பாடுபட்ட பெல் நிறுவன ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்கு இங்கு வந்துள்ளேன்.
பிரதமர் மோடி 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். அதில் தற்சார்பு இந்தியா மூலம் பல்வேறு துறைகளில் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. இதற்காக இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. கோல் கேஸை பயன்படுத்தி சிங் கேஸ் மூலம் மெத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது பெட்ரோலியத்தில் பத்து சதவீதம் மட்டுமே மெத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் மெத்தனால் உற்பத்தி மூலம் 20 சதவிகித மெத்தனால் பயன்படுத்த உள்ளது. இதனால் உலகிலேயே 20 சதவிகித மெத்தனால் பயன்படுத்தக்கூடிய முதல் நாடாக இந்தியா இருக்கும்.
கடந்த ஒரு வருடமாக பெல் நிறுவனத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் அதிக ஆர்டர்கள் வரப் பெற்றுள்ளது. இதன் மூலம் நலிவடைந்த துணை நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெரும். அதேபோல் இதுவரை இந்திய அளவில் பெல் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் வரப்பெற்றுள்ளது என்றார். மோடி அரசில் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையவில்லை என்று கூறும் எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. தொழில் நிறுவனங்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு புள்ளி விவரங்கள் உள்ளன எனவும் தெரிவித்தார்.