மாரியம்மா எங்கள் மாரியம்மா…
திருச்சி மாவட்டத்தில் உள்ள, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு கரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு கண்ணனூர் மாரியம்மன் என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, சமயபுரம் மாரியம்மன் கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது. அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப்பேருந்துகள் திருக்கோயில்வரை வந்து செல்கின்றன. சமயபுரத்திற்கு கண்ணனூர் , கண்ணபுரம், விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்ற திருப்பெயர்களும் வழங்கப்பெறுகின்றன. இவ்வூருக்கு கிழக்கே மருதூரும், தெற்கே வேங்கடத்தான் துறையூரும், வடக்கே போஜீஸ்வரர் திருக்கோயிலும், மேற்கே வெங்கங்குடியும் அமைந்துள்ளன. இத்தலத்திற்கு மகாளிக்குடி, வேங்கடத்தான் துறையூர், மருதூர், பனமங்கலம் ஆகிய சுற்றுக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மிக்க ஈடுபாட்டுடன் தொண்டு செய்கின்றனர்.கர்நாடகத்தை சேர்ந்த துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்த ஓய்சாளர் அல்லது போசாளர் என்ற மரபினர் கண்ணனூரைத் தலைநகராக கொண்டு 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். இவர்கள் வலிமை குன்றிய பிற்கால சோழ மன்னர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவி செய்தனர். சோழ ராஜ்ய பரிதிஷ்டாபனாசாரியன் – சோழகுல ஏக ரக்ஷன் என அழைத்துக்கொண்டனர். போசாள மன்னன், வீரசோமேசுவரன் இந்நகரை அமைத்து இதற்கு விக்கிரமபுரம் என்று அழைத்ததை பெங்களூர் அருங்காட்சியகச் செப்பேடுகள் கூறுகின்றன. தற்பொழுது கண்ணனூரில் உள்ள போஜேசுவரம் என்று அழைக்கப்படும் சிவன்திருக்கோயில் வீர சோமேசுவரனால் கட்டப்பட்டதாகும். போசாளீசுவரம் என இக்திருக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. வீர சோமேஸ்வரனுக்குப் பின்னர் அவன் மகன் வீர ராமநாதன் கண்ணனூரிலிருந்து அரசாட்சி செய்தான். வீர ராமநாதனின் அரசாட்சி கண்ணனூர் வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது. பின்னர் பாண்டியர்கள் கண்ணனூரை கைப்பற்றினர். கண்ணனூரில் முகமதியர் காலத்தில் ஒரு போர் நடந்திருக்கிறது. இப்போர் பற்றி வரலாற்று ஆசிரியர் இபன்படூடா வெகு விரிவாகக் கூறுகிறார். போசாள மன்னர்களில் கடைசி மன்னரான வீரவல்லாளன் மதுரையை ஆண்ட கியாசுதீன் துக்ளக்குடன் நடந்த போரில் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கண்ணனூர் முகமதியர் வசம் வந்தது. பிறகு விஜய நகர பேரரசின் பிரதானியான கம்பண்ண உடையார் காலத்தில் அவ்வரசின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. பிறகு 18ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப்போரில் கண்ணனூர் முக்கிய இடம் வகித்தது. ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நிகழ்ந்த போரில் இராபர்ட் கிளைவ் பிரெஞ்சுப் படைகளை இவ்விடத்தில் முறியடித்து ஆங்கில அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். எனவே கண்ணனூர் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது. தற்பொழுது உள்ளூர் பக்தர் மட்டுமல்லாது வெளி மாவட்ட மாநில நாடுகளைச்சேர்ந்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.