மீண்டும் மோடி மிரளும் காவல்துறை !
ஒரு வாரத்துக்குள் 2 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, ’குடும்ப அரசியல் செய்துவரும் கட்சிகள், நான் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும், அவர்களது வயிற்றில் புளியை கரைத்ததுபோல் இருப்பதாக உணர்கிறேன்’ என்று சென்னையில் கூறினார். இதற்கு தோல்வி பயத்தில் வயிற்றில் புளியை கரைத்ததால் அடிக்கடி பிரதமர் தமிழகம் வருகிறார் என்ற திமுகவினர் விமர்சித்தனர். இந்நிலையில், மீண்டும் புளி கரைசல் ஏற்படுத்த பிரதமர் மோடி வருவதாக பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்,தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு தமிழகம் வர உள்ளனர் என்கின்றனர். பிரதமர் மோடி, பிரச்சாரத்துக்காக 4 முறை தமிழகம் வர உள்ளார். ஒவ்வொரு முறை வரும்போது, குறைந்தது 2 கூட்டங்களில் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், திருச்சி, விருதுநகர், மதுரை, நாகர்கோவில் ஆகிய 10 தொகுதிகளில் அவர் பேசவும் ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
முதலில் 8ம்தேதி இன்று நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனக்கூறப்பட்ட நிலையில் 14ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் பிரதமர் வருகை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல் பிரச்சாரம் 22ம் தேதியாகவும் முதல் இடம் கோவையாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் இதுவரை உறுதியாகவில்லை பிரச்சாரத்திற்கு வரும் முன்பாக கூட்டணி இறுதி வடிவம் பெற்று அனைவரையும் மேடை ஏற்ற வேண்டும் என கறார் உத்தரவு என்கிறது டெல்லி வட்டாரம்.