முத்தரையர் கோட்டையில் விழுமா ஓட்டை !
நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சிகள் இடையே இன்னமும் கூட்டணியே முடிவாகவில்லை. அதற்கு பிறகுதான் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும், அதன்பின்னர் வேட்பாளர் தேர்வு நடக்கும். ஆனால், பெரம்பலுார் தொகுதியில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி இப்போதே களம் இறங்கிவிட்டார் அமைச்சர் நேருவின் மகன் அருண்.
திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதிக்கு சீட் கேட்ட அருண்நேரு கட்சி தலைமையில் பணத்தையும் கட்டி விட்டார் அத்தோடு அவர் போட்டியிட வேண்டும் என அருண்நேருவிற்கு ஆதரவாக 47 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவனன்றி ஒரு அணுவும் அசையா அந்த அணு அப்பா நேரு என்பது உலகம் அறிந்த ரகசியம், வேறு யாரும் விருப்பமனு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கட்சித்தலைமையின் பூரண ஆசி நமக்குத்தான் எனக்கருதிய அருண் இப்பொழுதே களம் காணத்தொடங்கிவிட்டார் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள். தந்தை கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சு வார்தை நடத்துவதில் பயங்கர பிஸியாக சென்னையிலேயே முகாமிட மகனோ பெரம்பலூரில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டாராம்.
பெரம்பலுாரில் திமுக கட்சி அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பெரம்பலுார் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுவதாகவும், தனக்கு ஆதரவு தரவலியுறுத்தியும், வெற்றிப்பெற அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அருண்நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது, தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தை துவங்குது குறித்தும் நிர்வாகிகளிடம் அருண்நேரு ஆலோசனை செய்து வருகிறாராம். இதையடுத்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெரம்பலுாரில் உள்ள முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆதரவு திரட்டி வருகிறார் அருண்நேரு.
அதுசரி நம்ம ஜாதகம் எப்படி என்பதை பார்ப்பதைவிட எதிரியின் ஜாதகம் எப்படி இருக்கிறது என்பதுதானே முக்கியம் அப்படி எதிர் தரப்பில் பாஜக கூட்டணியில் பாரிவேந்தர் அதிமுக கூட்டணியில் முன்னாள் திமுக அமைச்சரும் பின்னர் அதிமுகவில் இணைந்த என்.செல்வராஜ் சகோதரர் மகன் சந்திரமோகனுக்கு சீட் உறுதி என்கிறார்கள்.
அரசியல் நிபுணர்கள் சிலரிடம் பேசினோம் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன இவற்றில் முத்தரையர் சமுதாயம் இரு தொகுதிகளைத்தவிர மற்ற தொகுதிகளில் கனிசமான வாக்கு வாங்கியை வைத்திருக்கிறது.
ஆனால் மோதும் மூவரும் பணபலம் ஆள்பலத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதவர்கள் ஆகவே செங்கோட்டைக்கு போவது யார் என தேர்தல் முடியும் வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.