மோடி திருச்சி விசிட்… ஆனந்தம் ! பரமானந்தம் !!
ஜனவரி 22ம்தேதி, அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி, இன்று, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதற்காக, காலை 10:20 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, 10:35 மணிக்கு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை திடலுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அங்கிருந்து, 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு துளைக்காத காரில் சென்ற பிரதமர், வழி நெடுகிலும் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
கோவிலில் பிரதமருக்கு, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஹரிஸ் பட்டர் ஆகியோர் பூரண கும்பம் மரியாதை வழங்கி வரவேற்றனர் பின்னர் ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி அதனை தடவிக்கொடுத்து பழங்களை அளித்து ஆசி பெற்றார், தாயார், ரெங்கநாதர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தவர். உற்சவர் நம்பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் பருகினார் பிரதமருக்கு, ‘சடாரி’யை தலை மற்றும் புஜங்களில் வைத்து ஆசி வழங்கினார் நந்துபட்டர், தொடர்ந்து, மற்ற சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தபின், கோவிலில் நடந்த கம்பராமாயணம் பராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிற்பகல் 12:50 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர், காரில் ஹெலிபேட் சென்று, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் வருகைக்காக, கோவிலில் மலர் பந்தல் அமைத்து, அனைத்து சன்னதிகளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சன்னதிகளுக்கு செல்லும் நடைகளில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. ரங்கா ரங்கா கோபுரம் முன், 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வரம் வாசித்து வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவில் வளாகம் மட்டுமின்றி, கோவிலை சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திருச்சியில் மாநகர் முழுவதும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தவிர, நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2.30 மணி வரை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொது தரிசனமும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு, இன்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை தஞ்சாவூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. திருச்சியில் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், திருவானைக்காவல், கல்லுக்குழி சஞ்சீவி நகர் உட்பட 12 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீதர் ஸ்தோத்திர பாடல் கோஷ்டியின் மகளிர் அணியினர், ஹேமா ஸ்ரீதரன் தலைமையில், பிரதமரை வரவேற்கும் விதமாக, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்ற பிரபந்த பாசுரம், ஆண்டாள் பற்றிய கும்மி ஆட்டம், கோலாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்டவன் ஆசிரமம் வராக மகாதேசிக பாடசாலை சார்பில், ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி ஹிந்தியில், பிரதமரை வரவேற்று வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. அதில், ‘பாரத தேசத்து ராஜாவான (பிரதமர்) வரவு நல்வரவாகுக. வணக்கம்.’ என்று எழுதப்பட்டு இருந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி 11-12.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார்.