ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டி !
திருச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற காதர் மொய்தீன் கூறியதாவது… தி.மு.க., கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்காக, தி.மு.க., தலைமைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. மேலும், ராமநாதபுரம் தொகுதியில், எம்.பி.,யாக இருந்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நவாஸ் கனியை மீண்டும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க, இந்திய மக்களை மத அடிப்படையில் பிரித்து, வேறுபடுத்தி, 75 ஆண்டுகளாக பின்பற்றிய இந்திய நாட்டின் அரசியல் சாசன சம்பிரதாயங்களை, நடைமுறைகளை சிதைத்து, குலைத்து அராஜ ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
அந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், நாடாளுமன்ற தேர்தலில், ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொங்கு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, இந்திய முழுவதும் அரசியல் மாற்றத்தை, ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கீடு செய்தால், இரட்டிப்பு வரவேற்பு கொடுப்போம் என தெரிவித்தார்.