ரூபாய் 3 லட்சம் கோடி சொத்து ! பணக்கார கோவில்கள் பட்டியல் !!
இந்திய அளவில் அதிக சொத்து மதிப்புள்ள கோவில்கள் பட்டியலை ‘பிசினஸ் டுடே’ ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதிக பக்தர்களின் வருகை, அதன் வருமானம் எனப்பல அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சியம்மன் கோவில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வருவாய் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூபாய் 6 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஊர்களிலிருந்து ஒருநாளைக்கு இக்கோவிலுக்கு சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிரீடி சாய்பாபா கோயில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. இக்கோவிலில் மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ளது. இங்குள்ள சாய் பாபா சிலை அமர்ந்துள்ள தங்கச் சிம்மானம் 94கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் இதற்கு நன்கொடை வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபாவைத் தரிசிக்கத் தினந்தோறும் சுமார்25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவதாகச் சொல்லப் பட்டுள்ளது
இதற்கடுத்து 5வது இடத்தில் உள்ள கோயில் பஞ்சாப் பொற்கோயில். இது இந்திய அளவில் மிகப் பிரபலமானது என்பது பலரும் அறிந்ததே. சீக்கியர்களின் புனித ஸ்தலமான இதன் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா ? சுமார் 500 கோடி. இங்குள்ள கோவில் தங்க மேற்கூரையானது 400 கிலோ தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
இந்தப் பணக்கார கோவில்கள் பட்டியலில் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வங்கியில் மட்டும் தொகையாக ரூபாய் 1,737.04 கோடி உள்ளது. இது அசையும் சொத்து. இதற்கு அசையா சொத்தாக 271.5 ஏக்கர் நிலம் உள்ளது. இது கேரளாவில் உள்ள பழமையான கோவில், சுமார் 100 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டது. ஆனால், அங்கே உள்ள விக்ரஹ சிலை 500 ஆண்டு பழமையானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு வைஷ்ணோ தேவி கோவில்தான் அது. இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூபாய்.2 ஆயிரம் கோடி ரொக்கம். இதற்குச் சொந்தமாக 1,800 கிலோ தங்கம் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள கோவிலை நீங்கள் தரிசிக்க வேண்டும் என்றால் அப்படியே கீழே இறங்கி தென் மாநிலமான கேரளாவின் தலைநகரத்திற்கு வரவேண்டும். ஆம் ! திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபஸ்வாமி கோயில்தான் 2வது இடத்தில் இருக்கிறது. இதன் சொத்து மதிப்பைக் கேட்டால், தலையே வெடித்து விடும். ரூபாய் 1.20 லட்சம் கோடி இதன் சொத்து மதிப்பை கேட்டால் மலைப்பு வருமா வராதா ?
கடைசியாக முதல் இடத்தில் உள்ள கோவிலுக்கு வருவோம். அது வேறு எதுவாக இருக்க முடியும்? இந்தியாவிலேயே பணக்கார ஸ்வாமி எனச் சொல்லப்படும் திருப்பதி ஏழுமலையான் தான் முதல் இடத்தைப்பிடித்து உயரத்தில் இருக்கிறார். இதன் சொத்து மதிப்பு ரூபாய் 3 லட்சம் கோடி. கேரளாவைவிட மாஸ் காட்டுகிறது ஆந்திரா.இந்தக் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகிறார்கள். இப்படி ஆன்மீக பூமியாகத்திகழும் இந்தியா ஆச்சர்யத்திற்கு உரிய விஷயம்தானே !