வானவில் மொழிகளில் சேரனின் ஜர்னி…
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சேரன், முதன்முறையாக ‘ஜர்னி’ என்ற வெப்சீரியலை இயக்கியுள்ளார். சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. அது குறித்து சேரன் கூறியதாவது… என்னுடைய 25 ஆண்டு சினிமா பயணத்தில் முதன்முறையாக 9 பாகங்களை கொண்ட, 6 மணி நேரம் ஓடும் வெப்சீரியல் இயக்கியுள்ளேன். சரத் குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் ஜெயப்பிரகாஷ், வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னை, நாகர்கோவில், வட இந்தியா, துபாய், அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்தது. வெப் சீரியல் என்றாலும் இரண்டு, மூன்று சினிமாவுக்கான உழைப்பை கொடுத்திருக்கிறோம். அதை பார்த்தவர்கள், கருவும், சொல்லப்படுகிற மெசேஜும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.
வெப்சீரியல் என்றால் வன்முறை, கெட்ட வார்த்தை, ஆபாசம், ஹாரர் இருக்கும். இது எதுவும் இல்லாமல், வெளிநாட்டு வாழ்க்கை, விவசாயத்தின் அருமை, விழிப்புணர்வு, உணர்ச்சி போராட்டங்கள் என செல்லும் இந்த கதை ஓடிடி தளத்திலும் புதுமை படைத்துள்ளது. சமூகவலைதளங்களில் ‘ஜர்னி’ குறித்து நிறைய விவாதிக்கிறார்கள். நான் இயக்கிய ‘ஆட்டோகிராப்’ படம் 5 மொழிகளில் வெளியானது. ‘ஜர்னி’ வெப்சீரியல், அதையும் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, மராட்டி என 7 மொழிகளில் வெளியாகி உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினார்.