வீடு ஒதுக்கியதில் முறைகேடு : அடுத்த செக் ஐ.பிக்கு !
சட்டவிரோதமாக வீடு ஒதுக்கிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்தி 31.08.2024 க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனைகளை தனது உறவினர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கும் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி மீது கடந்த 2012ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில்,அரசியல் பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள முறைகேடு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான ஊழல் முறைகேடு புகார் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில், விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு எந்த ஒரு நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும், உரிய ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் அப்போதைய சந்தை விலைக்குத் தான் வீடுகள் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தான் உடந்தையாக இருந்ததாக கூறும் புகாரில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வழக்கு தொடர்வதற்கு முன் மக்கள் பிரிதிநித்துவ சட்டத்தின் படி அமைச்சராக இருந்த தன் மீது வழக்கு தொடர மாநில ஆளுநரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும், முறைகேடு புகாருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
அவசரகதியில் அரசியல் உள்நோக்கத்தோடும், பழிவாங்கும் நோக்கத்துடனும் தொடரப்பட்ட முறைகேடு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடர சட்டமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுத்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் தொடரப்பட்ட வழக்கு என்பதால், அந்த வழக்கில் இருந்து 2023ம் ஆண்டு அமைச்சரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் ஐ பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகரிடம் அனுமதி வாங்கியது தவறு, என்பதால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதில் எந்த தவறும் இல்லை எனத்தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டால், ஆளுநரிடம் அனுமதி ஏன் வாங்கவில்லை. ஆளுநரிடம் அனுமதி வாங்க எந்த தடையும் பிறிப்பிக்கவில்லை. ஆளுநரிடம் அனுமதி வழங்க முயற்சி செய்யாமல் அமைதியாக இருந்தது லஞ்ச ஒழிப்புத்துறை ஒருதலை பட்சமாக நேர்மையாக விசாரணை செய்யவில்லை என்பது தெளிவாகிறது என கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப் 26) தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு நீதிமன்றம் ஐ பெரியசாமியை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். ஒரு மாதத்தில் இரு தரப்பும் தேவையான ஆவணங்களைத்தாக்கல் செய்ய வேண்டும் வழக்கை முடிக்க 31.08.2024க்குள் முடிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகியும் விளக்கமளிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.