வெங்காய ஏற்றுமதிக்கு வர்த்தக அமைச்சகம் அனுமதி !
இந்தியாவில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச சந்தைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால், உள்நாட்டில் வெங்காயத்தின் விலை குறைந்தது. இப்போது பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 30 முதல் 40 ரூபாய்க்குள்ளும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் உள்நாட்டில் விலை சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கணிசமான அளவு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வெங்காய ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்காரணமாக, இந்தியாவில் இருந்து 64 ஆயிரத்து 400 டன் பெரிய வெங்காயத்தை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இந்தியாவின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள வங்கதேசத்துக்கு 50 ஆயிரம் டன் வெங்காயமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு 14 ஆயிரத்து 400 டன் வெங்காயமும் ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது இதனால் வெங்காய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.