வேலூர் : படிப்பு மட்டுமே வாழ்கையல்ல ஏடிஜிபி அறிவுரை !
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் தங்க கோவில் பீடாதிபதி சக்தி அம்மா மற்றும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேஷ் குமார் யாதவ் பங்கேற்று மாணவர்களுக்கு எழுதுகோல்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய சைலேஷ்குமார் யாதவ், மாணவர்கள் உயர் கல்வியில் பயில்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும், உயர்ந்த நிலைக்கு வந்தவுடன் பொதுமக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். பெற்றோர்களுக்கு ஏற்படும் சிரமங்களில் தாங்களும் பங்கு பெற்று அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உயர்ந்த கல்வி பெற்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு சமுதாயத்தில் சிறந்த மனிதராக உயர வேண்டும்.
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி செயல்பட வேண்டும், அப்பொழுதுதான் தான் வெற்றி பெற முடியும். படிப்பு மட்டும் வாழ்க்கையல்ல படிப்புடன் கூடிய ஒழுக்கம் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.என்று சைலேஷ்குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.